Published : 03 May 2016 10:46 AM
Last Updated : 03 May 2016 10:46 AM

5-ம் தேதி முதல் பூத் சிலிப் விநியோகம்: தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

தலைவர்களின் தொகுதிகளுக்கு சிறப்பு பார்வையாளர்கள்



*

தமிழகம் முழுவதும் வீடு வீடாக வந்து வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி 5-ம் தேதி தொடங்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 16-ம் தேதி நடக்கிறது. இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழக தேர்தல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று கூறியதாவது:

தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க ஏற்கெனவே 124 பார்வையாளர்கள் தமிழகம் வந்து, 2 தொகுதிகளுக்கு ஒருவர் என்ற அளவில் கண்காணிப்பு பணிகளை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், கூடுதலாக 42 சிறப்பு செலவினப் பார்வையாளர்கள் வந்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் செலவினங்களை இவர்கள் கண்காணிப்பார்கள்.

தமிழகத்தில் 2011 சட்டப் பேரவை தேர்தலில் 58,761 வாக்குச் சாவடிகள், 2014 நாடாளுமன்ற தேர்தலில் 64,094 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தற்போது 66,001 வாக்குசாவடிகள் அமைக் கப்படுகின்றன.

வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புவோர் இனி ஆன்லைன் மூலம், விரைவு தபாலில் பெறுவதற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதுதவிர, சென்னையில் அடையாறு, அமைந்தகரை ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

புதிய வாக்காளர்கள் தமிழக தேர்தல் துறை இணையதளத்தில் தங்கள் பெயர் உள்ளிட்ட தகவல் களை பதிவு செய்து, வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை அறியலாம். ‘1950’ என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் அறியலாம். வாக்காளர்களுக்கான ‘பூத் சிலிப்’ வரும் 5-ம் தேதி முதல் வீடு வீடாக விநியோகிக்கப்படுகிறது.

தனி வரிசை இல்லை

கைபேசி எண் அளித்த வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி விவரங்கள், அடையாள அட்டை எண், வேட்பாளர்கள் குறித்த தகவல் ஆகியவை 3-ம் தேதி (இன்று) முதல் அனுப்பப்படுகின்றன. வாக்குப்பதிவுக்காக ஆண், பெண் வாக்காளர்களுக்கு தனித்தனி வரிசை அமைக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் வரிசை யில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்களிக்கலாம். ஆனால் நடிகர், நடிகைகள் போன்ற பிரபலங் களுக்கு தனி வரிசை கிடையாது.

வேட்பாளர்கள் தங்கள் செலவுக் கணக்கை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மே 5-ம் தேதி முதல் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு, வாக்குப்பதிவு வரை 3 நாட்களுக்கு ஒருமுறை செலவுக் கணக்கை அளிக்க வேண்டும். தேர்தல் தொடர்பான புகார்களை கண்காணிக்க தலைமைச் செயலகத்தில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், 19 டிஆர்ஓக்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

ரூ.80 கோடி பறிமுதல்

தேர்தல் விதிகளை மீறி, உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம், பொருட்களை பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர், வருமானவரி புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை வருமானவரித் துறை யினர் கைப்பற்றிய ரூ.24 கோடி உட்பட ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

பிரத்யேக வாகனம்

தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள், 702 நிலையான கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர, நேற்று முதல் 200 தொகுதிகளுக்கு கூடுதலாக 2 பறக்கும் படைகள் சேர்க்கப் பட்டுள்ளன. இந்நிலையில், பறக்கும் படைகளுக்கு நாட்டி லேயே முதல்முறையாக பிரத்யேக வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘‘பறக்கும் படை வாகனங்களை தனியாக அடையாளம் காண்பதற்கேற்ப அரசு வாகனத்தின் மேல் சுழல் விளக்குடன், ‘பறக்கும் படை’ என எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. வாகனத்தின் பக்கவாட்டிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதை தமிழக தேர்தல் துறை வடிவமைத்து, தேர்தல் ஆணை யத்துக்கு அனுப்பியது. அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இது தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளாவிலும் அமல்படுத்தப் பட்டுள்ளது’’ என்றார்.

தேர்தல் பணிகள் தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளருடன் தேர்தல் டிஜிபி மகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.

உள்துறை செயலாளருடன் டிஜிபி, ஏடிஜிபி ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 16-ம் தேதி நடக்கிறது. தேர்தல் பணி களை கவனிக்க தனி டிஜிபியாக கே.பி. மகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதுதவிர, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த திரிபாதி மாற்றப்பட்டு சைலேந்திரபாபுவும், சென்னை மாநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டு அசுதோஷ் சுக்லாவும் நியமிக்கப்பட்டனர். இவர்களைத் தவிர, பல மாவட்டங்களில் ஆட்சியர்களும், எஸ்.பி.க்களும் மாற்றப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு துணை ராணுவப் படையினரும் வருகின்றனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மாவை தேர்தல் டிஜிபி மகேந்திரன், கூடுதல் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் நேற்று சந்தித்தனர். அப்போது தேர்தல் பாதுகாப்புப் பணியில் போலீஸாரை பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x