Published : 24 May 2022 06:12 AM
Last Updated : 24 May 2022 06:12 AM
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கியதில் இருந்து கடும் வெயில் வாட்டி வந்தது. கடந்த4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், இதன் தாக்கம் மேலும் கடுமையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அசானி புயல் உருவானதைத் தொடர்ந்து, அதன் தாக்கத்தால் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால், கடந்த சில நாட்களாக குளுமையான சூழல் நிலவியது.
இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 10 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 104 டிகிரி பதிவானது. மேலும் கடலூரில் 103 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், வேலூர், பரங்கிப்பேட்டை, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 102 டிகிரி, கரூர் பரமத்தி, புதுச்சேரி, திருத்தணியில் தலா 101 டிகிரி, திருச்சியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் கூறும்போது, ‘‘கடந்த சில வாரங்களாக புயல் மற்றும் தமிழகப் பகுதியில் நிலவிய காற்று சுழற்சி காரணமாக பெய்த மழையால் வெப்பநிலை குறைந்திருந்தது. தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. அதனால் மேற்குதிசையில் இருந்து வறண்ட காற்று வீசுவதால், ஈரப்பதம் மிகுந்த வங்கக் கடல் காற்று நிலத்துக்குள் நுழைய முடியவில்லை. இதன் விளைவாக தற்போது வெப்பநிலை உயர்ந்துள்ளது. ஆனால் இது மே மாதத்தில் பதிவாகும் வழக்கமான வெப்பநிலைதான்’’ என்றார்.
4 நாட்கள் மழை வாய்ப்பு
இதற்கிடையே வெப்பச்சலனம் காரணமாக மே 24 (இன்று) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். 25, 26, 27-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT