Published : 24 May 2022 06:45 AM
Last Updated : 24 May 2022 06:45 AM

அலங்காநல்லூரில் ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு - பிரம்மாண்ட அரங்கம் அமைக்க உள்ளதாக அமைச்சர் தகவல்

ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தை பார்வையிட்ட அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர்எஸ். அனீஷ்சேகர் உள்ளிட்டோர்.

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிரம்மாண்டமாக அமைக்கப்படும் அரங்கில் ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைக்குளத்தை அடுத்த கீழக்கரை அருகே உள்ள புறம்போக்கு நிலத்தை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் ஆகியோர் தலைமையில் சுற்றுலா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

பின்னர், அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜல்லிக்கட்டு நடத்த பிரம்மாண்டமான அரங்கு அமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின்போது தை 1,2,3 ஆகிய தேதிகளில் முறையே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி நடப்பது வழக்கம்.

தொடர்பு இல்லை

அலங்காநல்லூர் அருகே புதிதாக ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும். இந்த அரங்கத்துக்கும், தை பொங்கலின்போது பாரம்பரியமாக அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.

தற்போது அமைக்கப்பட உள்ள பிரம்மாண்ட அரங்கம் உலக தமிழர்களுக்கானது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த அரங்கம் அமைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் ஓரிரு நாட்கள் இங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x