Published : 24 May 2022 06:25 AM
Last Updated : 24 May 2022 06:25 AM

வரும் 26-ம் தமிழகத்தில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் - பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீஸார்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை உலகத் தரத்தில் சீரமைத்தல், தாம்பரம் - செங்கல்பட்டு 3-வது ரயில்பாதை, மதுரை- தேனி அகல ரயில்பாதை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்டவற்றை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி 26-ம் தேதி சென்னை வருகிறார்.

அவர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மேலும் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதாக இருந்தது. ஆனால், கரோனா பரவல் அதிகரித்ததால், பிரதமரின் வருகை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 26-ம் தேதி சென்னை வருகிறார்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலையம் 114 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ரயில் நிலையத்தில் தினசரி 35 விரைவு ரயில்கள், 240 புறநகர் மின்சார ரயில்கள் வந்து செல்கின்றன. இதன்மூலம், கடந்த 2021-22-ம் நிதியாண்டில் ரூ.125 கோடி வருவாய் கிடைத்தது.

இந்நிலையில், இந்த ரயில் நிலையம் ரூ.760 கோடி செலவில் உலகத் தரத்தில் சீரமைக்கப்பட உள்ளது. இதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இச்சீரமைப்பு பணிகளை பிரதமர் மோடி, வரும் 26-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின்படி, சென்னை எழும்பூர் ரயில் நிலையம், அடுத்த 40 ஆண்டுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இதன்படி, பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக தனித்தனியாக வருகை, புறப்பாடு முனையங்கள் அமைக்கப்படும். ரயில் நிலைய கட்டிடங்கள், அழகிய மின்விளக்குகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புல்தரைகள் என அனைத்தும் சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்படும். மேலும், வாகனங்கள் நிறுத்துவதற்கு பிரத்யேக வசதிகள் ஏற்படுத்தப்படும். அனைத்து நடைமேடைகளுக்கும் பயணிகள் எளிதில் சென்றுவர வசதியாக நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்), மின்தூக்கி (லிஃப்ட்), நடை மேம்பாலம் மற்றும் பயணிகள் ஓய்வெடுப்பதற்கான அறைகள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் வந்து செல்வதற்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

வணிக வளாகங்கள்

இவை தவிர, வணிக வளாகங்கள், வர்த்தக அலுவலகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்படும். இதற்காக, காந்தி இர்வின் சாலையில் 4 மாடி கட்டிடமும், பூந்தமல்லி சாலைப் பகுதியில் 6 மாடி கட்டிடமும் கட்டப்படும்.

மேலும் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சுமார் 30 கி.மீ. தூரத்துக்கு 3-வது பாதை ரூ.256 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மதுரை - தேனி அகலப்பாதை திட்டம் ரூ.450 கோடி செலவில் 90.4 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். அத்துடன், தாம்பரம் - செங்கல்பட்டு மற்றும் மதுரை - தேனி வழித் தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்து சேவையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எரிவாயு குழாய் வழித்தடம்

எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் எரிவாயுவை கொண்டு செல்வதற்காக, 1,445 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,760 கோடி மதிப்பில் எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகப்பட்டினம் - மதுரை - தூத்துக்குடி இடையே திரவ இயற்கை எரிவாயு பைப்லைன் தடம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம், மின்னுற்பத்தி நிலையங்கள், ரசாயனம் மற்றும் உர தயாரிப்பு ஆலைகள், கண்ணாடி தொழிற்சாலைகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இன்றியமையாத தொழில்துறைகளுக்கு தூய்மையான, சிக்கனமான எரிவாயுவை வழங்க முடியும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதன்படி, நிகழ்ச்சி நடைபெறும் 26-ம் தேதி மாலை 5.40 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்கு வரும் பிரதமரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழக பாஜக நிர்வாகிகள் வரவேற்கின்றனர். பின்னர், வேப்பேரியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, இரவு 7 மணி அளவில் அவர் மீண்டும் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

முன்னதாக விமான நிலையத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்குக்கு நேரடியாக காரில் செல்வது அல்லது ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு சென்று அங்கிருந்து காரில் செல்வது என இருவிதமான வழிகளில் வரவேற்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து காவல் துறையினர், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாகவே பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர்.

சென்ட்ரல் ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை ஆகியவை அருகே இருப்பதால், நேரு உள்விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள பகுதியில் எப்போதும் வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். எனவே, பிரதமர் வரும் நேரத்தில் அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து நிறுத்தம் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் ஆய்வு

நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் ஏற்பாடுகளை தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலர் தீரஜ்குமார், பொதுப்பணித் துறை செயலர் தயானந்த் கட்டாரியா தலைமையில் அதிகாரிகள் குழுவினர் இரவு பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பணிகளை பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். நடந்து வரும் பணிகள் குறித்து அதிகாரிகள் அவருக்கு விளக்கினர். சென்னையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜகவினரும் முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x