Published : 24 May 2022 06:27 AM
Last Updated : 24 May 2022 06:27 AM

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்து நாளை முதல் ஒரு வாரம் போராட்டம்: கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அறிவிப்பு

சென்னை: மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 25 முதல் 31-ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

இதுதொடர்பாக சென்னையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) லிபரேசன் மாநிலக் குழு உறுப்பினர் வரதராஜன்ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை மத்திய அரசு முழுமையாக நீக்கி, மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம் என்று மோடி அரசு தெரிவித்தது. ஆனால், 6 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். இதனால், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. பருத்தி உற்பத்தி குறையவில்லை. ஆனால், பஞ்சு விலை உயர்வால் ஜவுளித் தொழில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் பஞ்சை பதுக்கி வைத்திருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வரும் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இயக்கம் நடத்த உள்ளோம்.

மேலும், மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தவும், சாதி, மதத்தின் பெயரால் சமூகத்தைப் பிளவுபடுத்துவதை எடுத்துரைக்கவும், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்றுவதற்காகவும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

அதன்படி, வரும் 25-ம் தேதி வீடு வீடாக துண்டுப் பிரசுரம் வழங்கப்படும். வரும் 26-ம் தேதிஊரக, ஒன்றிய, வட்டம், மாவட்டஅளவில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்படும். வரும் 27-ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) லிபரேசன் ஆகிய 4 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள்.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு முழுமையாக குறைத்தால், தமிழக அரசும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கச் சொல்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மே 27-ல் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்,4 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x