Published : 24 May 2022 07:28 AM
Last Updated : 24 May 2022 07:28 AM

சுகாதாரத் துறையில் 4,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; சென்னையில் சித்த மருத்துவ பல்கலை அலுவலக கட்டிடம் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தூத்துக்குடி: “சுகாதாரத்துறையில் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் சென்னை அண்ணா நகரில்சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கான அலுவலக கட்டிடத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார். மதுரவாயல் அல்லது சிட்லபாக்கத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமையும்.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை,காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லை. இந்த மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி வேண்டும் என மத்திய அரசிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

புதிய ஒமைக்ரான் தொற்று

ஒமைக்ரான் தொற்றின் புதிய வகையான பிஏ-4 வைரஸ் செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அருகே ஒரு நபருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அவர் நலமுடன் உள்ளார். தமிழகத்தில் தினசரி தொற்று 50-க்கும் கீழ்தான் உள்ளது. கடந்த இரண்டரை மாதத்தில் உயிரிழப்பு எதுவுமில்லை.

நிதிநிலை அறிக்கையில் கூறியவாறு, சுகாதாரத்துறையில் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை எம்ஆர்பி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்காக செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் 7,296 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ஊதியத்தை விட செவிலியர்களுக்கு ரூ.4,000, சுகாதார பணியாளர்களுக்கு ரூ.3,000 உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x