Published : 24 May 2022 07:40 AM
Last Updated : 24 May 2022 07:40 AM

மரபுகளை பின்பற்ற அரசு ஆதரவு தர வேண்டும்: தருமபுரம் ஆதீனகர்த்தர் வலியுறுத்தல்

மயிலாடுதுறை: தருமபுர ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடங்கல் ஏற்பட்டபோது முதல்வர் தலையிட்டு உடனடியாக தீர்வு கண்டதால், விழா சிறப்பாக நடைபெற்றது. மரபு வழியை பின்பற்றுவதற்கு அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று தருமபுரம் ஆதீனகர்த்தர் வலியுறுத்தினார்.

தருமபுரம் ஆதீன குருபூஜை விழா நேற்று முன்தினம் நிறைவடைந்ததையடுத்து, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ல மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தருமபுரம் ஆதீன குருபூஜை விழாவில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கிய தமிழக முதல்வர், இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் ஆதரவு குரல் கொடுத்த அரசியல் கட்சியினர், இந்து அமைப்பினர், சிவனடியார்கள், பக்தர்கள் அனைவருக்கும் என்றும் சொக்கநாத பெருமான் அருள்கிடைக்க வாழ்த்துகிறோம்.

தருமபுரம் 25-வது ஆதீனகர்த்தர் காலத்தில் பட்டினப்பிரவேசத்தில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமரவைத்து தூக்குவது குறித்த கேள்வியை பெரியாரிடம் அவரது அமைப்பினர் முன்வைத்தபோது, தமிழன் பல்லக்கில் வர வேண்டும் என்றுதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என பெரியார் கூறியுள்ளார். அப்போதுகூட,எந்த இடையூறும் இல்லாமல் பட்டினப்பிரவேசம் நடைபெற்றுஉள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் இந்த நிகழ்ச்சி தடைபடாமல் நடைபெற்று வந்தது. ஆனால், நிகழாண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட இடையூறை நாம் தடங்கலாக பார்க்கவில்லை. மாறாக, இந்தப் பட்டினப்பிரவேசம் குறித்துஇப்போது மாநிலத்தை கடந்து, நாடுகளையும் கடந்து தெரிய வந்திருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். நிகழாண்டு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட தடங்கலை, தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாக தீர்வு கண்டதால், விழா சிறப்பாக நடைபெற்றது. மரபு வழியை பின்பற்றுவதற்கு அரசு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x