Published : 24 May 2022 07:43 AM
Last Updated : 24 May 2022 07:43 AM
கடலூர்: சிதம்பரம் தில்லை நடராஜா, தில்லை காளி தெய்வங்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவு செய்தததைக் கண்டித்தும், அதன் நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தியும் சிதம்பரத்தில் நேற்று சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சிதம்பரம் கோயிலில் வீற்றிருக்கும் தில்லை நடராஜர் மற்றும் தில்லை காளி தெய்வங்கள் பற்றி சமூக வலைதளம் ஒன்றில் ஆபாசமாகவும் அவதூறாகவும் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு இந்து அமைப்புகள், சிவனடியார்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிர்வாகியை கைது செய்ய கோரி நேற்று சிதம்பரத்தில் சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் திருக்கழுக்குன்றம் தாமோதரன் சிவனடியார், திருவாரூர் நடராஜன் சுவாமிகள், சென்னை சிவவாதவூர் அடிகள், கள்ளக்குறிச்சி பாசார் சிவபாலன் உள்ளிட்ட சிவனடியார்கள் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், ‘தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் இதுகுறித்து பல அமைப்புகள் சார்பில் புகார் அளித்தும், சம்பந்தப்பட்டவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரையில் இல்லை’ என்று கூறி தமிழக அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.
முன்னதாகச் சிதம்பரத்துக்கு வந்த சிவனடியார்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்று அங்கு மேளதாள, சிவ வாத்தியங்கள் முழங்க நடனம் ஆடினர். பின்னர் நடராஜர் கோயில் கனகசபைக்கு சென்று வழிபட்டனர்.
காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT