

கோவை: மருதமலை முருகன் கோயிலில், விரைவில் லிப்ட் வசதி ஏற்படுத் தப்படும் என இந்துசமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.
கோவை பேரூரில் உள்ள பட்டீசுவரர் கோயிலில் பக்தர்களின் பயன்பாட்டுக்காக, பேட்டரி காரை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: கோவை வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் பக்தர்கள் வருகின்றனர். வெள்ளியங்கிரி மலையில் பாதை அமைக்க நான் மற்றும் அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்தினோம். வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்தது ஒரு புதிய அனுபவம். குடிநீர் வசதி, கழிவறை வசதி, இளைப்பாற ஷெட் வசதி, மலைப்பாதையில் பக்தர்கள் கடினமில்லாமல் நடந்து செல்வதற்கான வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.
பேரூர் பட்டீசுவரர் கோயிலில் குடமுழுக்கு மற்றும் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் 9 உப கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள் ளது. பேரூர் பட்டீசுவரர் கோயில்அருகே, தர்ப்பண மண்டபம் கட்டும் பணி 3 மாதங்களுக்குள் முடிக்கப் படும். மேலும், கோவையில் உள்ள 25 கோயில்களில் ரூ.63 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது.
மருதமலை முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ‘லிப்ட்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இதற்காக 36 பேர் நன்கொடை தருவதாக ஒப்புதல் அளித்தனர். தற்போது இதில் மேலும் ரூ.6 கோடி தேவைப்படுகிறது. உபயதாரர்கள் நிதி அல்லது திருக்கோயில் நிதியில் ‘லிப்ட்’ அமைக்கும் பணியை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக கடந்த முறை விடப்பட்ட ஒப்பந்தப் புள்ளியில் யாரும் பங்கேற்கவில்லை. எனவே, அடுத்த மாத இறுதிக்குள் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அடுத்த 50 நாட்களுக்குள் ‘லிப்ட்’ அமைக்கும் பணி தொடங்கப்படும்.
மருதமலையில் வாகனம் நிறுத்துவதற்கான இட வசதி செய்யப்படும். மருதமலை முருகன் கோயிலுக்கு என பிரத்யேகமாக மாஸ்டர் பிளான் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மல்டி லெவல்கார் பார்க்கிங் (அடுக்குமாடி கார்நிறுத்தகம்), மடப்பள்ளி, மலைப்பாதை சீரமைத்தல் போன்ற அனைத்து அடிப்படை கட்டமைப்பு களும் மேற்கொள்ளப்படும். அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில், பழநியில் உள்ள இடும்பன் மலை கோயில் ஆகியவற்றில் மின்கலன் (ரோப்கார்) வசதி ஏற்படுத்தப்படும்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்தாண்டு ரூ.662 கோடி மதிப்பில் கோயில்களில், திருப்பணிகளுக்கு உத்தரவிட்டு அப்பணிகள் நடந்து வருகின்றன. நடப்பாண்டு 1,500கோயில்களில் ரூ.1000 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஒரு கால பூஜை திட்டத்தில் 2 ஆயிரம் கோயில்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பல கோயில்கள் வருமானம் இல்லாமல் உள்ளன. இவற்றில் முதல்கட்டமாக 80 கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடியை அரசு நிதியாக முதல்வர் வழங்கியுள்ளார். கடந்த ஓராண்டில் கோயிலுக்கு சொந்தமான ரூ.2,500 கோடி மதிப்பிலான இடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வாடகைக்கு இருப்பவர்களிடம் இருந்து ரூ.180 கோடி கடந்த மூன்று மாதங்களில் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை வழிபாட்டை அனைத்து திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. திமுகவின் ஆட்சி ஆத்திகர்கள், நாத்திகர்கள் என அனைவருக்கு மான ஆட்சி. இந்த ஆட்சிக்கு பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக், பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
| அதிகாலையில் அடிவாரத்தை வந்தடைந்த அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு வெள்ளியங்கிரி மலையில் ஏறத் தொடங்கினார். மனைவியும் உடன் சென்றார். அன்று மதியத்துக்கு பின்னர் 7-வது மலைக்குச் சென்ற அவர்கள், அங்கு சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்தனர். பின்னர், கோயில் நிர்வாகிகள், பக்தர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார். சிறிது நேர ஓய்வுக்கு பின்னர், மலையில் இருந்து கீழிறங்கத் தொடங்கி, நேற்று அதிகாலை 4 மணிக்கு அடிவாரத்தை வந்தடைந்தனர். |