Published : 24 May 2022 06:15 AM
Last Updated : 24 May 2022 06:15 AM
சென்னை: சென்னை மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தை விரைவாகத் தொடங்கி, குறுகிய காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியத்துக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புழுதிவாக்கம் சித்தேரி ஏரியில் கழிவுநீர் கலப்பதால், அந்த ஏரியின் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் செய்தி வெளியானது. அதனடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து, வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புழுதிவாக்கம் சித்தேரி ஏரியை ஒட்டியுள்ள, புழுதிவாக்கம் பகுதியில் உள்ள 11 தெருக்களில் 836 வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு வழங்கி, பாதாள சாக்கடை வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அங்கு சித்தேரியை ஒட்டியுள்ள பகுதியில் 8 தெருக்கள் உள்ளன. அவற்றில் மொத்தம் 109 வீடுகள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் ரூ.256 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க நிர்வாக அனுமதி பெறப்பட்டு, டெண்டரும் கோரப்பட்டுள்ளது.
டெண்டர் பணிகள் முடிந்த பின்னர், பணிகள் தொடங்கிய நாளில் இருந்து 30 மாதங்களுக்குள் அப்பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மடிப்பாக்கம் பகுதியில் 30 மாதங்களில் பணிகளை முடிப்பதற்குப் பதிலாக, ஒப்பந்ததாரருடன் கலந்து பேசி, முடிந்தவரை விரைவாகப் பணிகளைத் தொடங்கி, குறுகிய காலத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளின் தரத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
தமிழக அரசின் உரிய நடவடிக்கையால், சித்தேரியில் உள்ள நீரின் தரம் மேம்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
எனவே, இவ்விரு துறைகளும் அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் தொடர்பான அறிக்கைகளை, வழக்கின் அடுத்த விசாரணை நாளான மே 25-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT