

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட கண்மாய்களுக்காக நேற்று முதல் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு கடந்த ஓராண்டாகவே நீர்வரத்து சீராக இருந்து வருகிறது. இதனால் 71 அடி உயரம் கொண்ட அணையில் சராசரியாக 67அடி நீர்மட்டம் இருந்து வருகிறது. அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால் இந்த ஆண்டு முதல்போக பாசனத்துக்காக ஜூன் 2-ல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
இதற்கிடையே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண் மாய்களில் நீரைத் தேக்கும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று தமிழக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு வைகை அணையில் இருந்து
7 பிரதான மதகுகள் மூலம் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட பொதுப் பணித் துறைச் செயற் பொறியாளர் பாரதிதாசன் தலைமையிலான அதிகாரிகள் தண்ணீரைத் திறந்து வைத்துப் பூக்கள் தூவினர். வரும் 9-ம் தேதி வரை இரண்டு கட்டமாக மொத்தம் 849 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.
இதன் மூலம் சிவகங்கை மாவட்ட வைகைப் பூர்வீகப் பாசனப் பகுதி 1,2 மற்றும் 3-ல் உள்ள மொத்தம் 118 கண்மாய்களில் நீரைத் தேக்கி வைக்க முடியும். மேலும், அந்தக் கண்மாய்களைச் சுற்றியுள்ள சுமார் 47 ஆயிரத்து 929 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதுதவிர, வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளிலும் நீர்ப்பெருக்கம் ஏற்படும் என்று பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
நேற்றைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 66.93 அடியாகவும், நீர்வரத்து 10 கன அடியாகவும், நீர்வெளியேற்றம் 2 ஆயிரத்து 72 கன அடியாகவும் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையைப் பொருத்தவரை 131.55 அடி நீர்மட்டமும், நீர்வரத்து 642 கன அடியாகவும், வெளியேற்றம் 100 கன அடியாகவும் உள்ளது.