Published : 10 May 2016 08:04 AM
Last Updated : 10 May 2016 08:04 AM

ஆர்.கே.நகரில் வீதி வீதியாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பிரச்சாரம்: அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு

முதல்வர் ஜெயலலிதா போட்டி யிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்தார்.

முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் 2-வது முறையாக களமிறங்கியுள்ளார். முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகத்தின் மருமகன் எம்.என்.ராஜா, அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று காலை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை, காசிமேடு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.

சில இடங்களில் நடந்து சென்று வாக்கு சேகரித்த அவர், டீ கடையில் டீ குடித்தவாறு பொதுமக்களுடன் கலந்துரை யாடினார்.

அப்போது செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியில் எங்கு பார்த்தாலும் குப்பையுடன் அசுத்தமாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

மழை, வெள்ளத்தால் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ அதிமுக அரசு முன்வரவில்லை. அதேநேரத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் ஓடோடி வந்தனர். மத்திய அரசு கொடுத்த பணத்தைத்தான் வெள்ள நிவாரணமாக வீட்டுக்கு தலா ரூ.5 ஆயிரத்தை அதிமுக அரசு வழங்கியுள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசுக்கு அதிமுக அரசு ஒத்துழைப்பு தரவில்லை. தமிழகத்தின் திட்டங்கள் குறித்து பேசுவதற்காக முதல்வரை சந்திக்க முடியவில்லை. மத்திய அரசு குறைந்த விலையில் எல்இடி விளக்குகள், நிலக்கரி வழங்க முன்வந்தும் அதனை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ளவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி யிருந்தால் தமிழக அரசுக்கு ரூ.400 கோடி மிச்சமாயிருக்கும்.

கடந்த 2 ஆண்டுகளில் பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இப்போது இந்தியாவில் எங்கும் மின்வெட்டு இல்லை. அதிமுக, திமுக இரு கட்சிகளும் தமிழகத்தை ஊழலில் மூழ்கடித்துவிட்டன.

இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x