Published : 02 May 2016 11:27 AM
Last Updated : 02 May 2016 11:27 AM

மது குடிக்கும் 46% பேரின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும்?- இந்திய கம்யூ. தா.பாண்டியன் அச்சம்

தமிழகத்தில் தற்போது 46 சதவீதம் பேர் மது குடிக்கிறார்கள் என்ற தகவலை அறியும்போது, அவர்கள் யாருக்கு வாக்கு அளிக்கப் போகிறார்கள் என்ற பயம் எனக்கும் வந்துவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

கோவைக்கு நேற்று வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: "காலம் காலமாக நடத்தப்பட்டு வரும் மே தின நிகழ்ச்சிக்காக கொடிகள் கட்டக் கூடாது உட்பட பல்வேறு தடைகளை தேர்தல் ஆணையம் விதிப்பது சரியல்ல. பாதுகாப்புத் துறையில் நேரடி முதலீட்டை அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்த்துள்ளன. இந்தியாவில் 2 பங்கு நேரடி முதலீட்டை மொரீஷியஸ் வைத்துள்ளது குறித்து விசாரிக்க வேண்டும்.

குஜராத்தில் 2003-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மோடி, கிருஷ்ணா கோதாவரியில் 30 லட்சம் மெட்ரிக் டன் எரிவாயு இருப்பதாகவும் அதை எடுத்தால் 2005-ம் ஆண்டு முதலே நாட்டுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்யத் தேவையல்லை எனச் சொன்னார். இதற்காக 16 வங்கிகளில் ரூ.19 ஆயிரத்து 700 கோடி கடன் வாங்கப்பட்டது. இவ்வளவு பணமும் ஆய்வுக்காக, கட்டிடம் கட்ட, சுத்திகரிக்க என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சொட்டு எண்ணெய்யோ எரிவாயுவோ எடுக்கப்படவில்லை. முழு தோல்வி என மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார். எனவே, இதற்கு காரணமான அத்தனை பேரையும் விசாரிக்க உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. அந்த கட்சிதான் தமிழகத்தில் ஊழலை ஒழிக்கப் போகிறோம் என்று கிளம்பி வந்துள்ளது’ என்றார்.

தேர்தலில் வைகோ போட்டியிடாதது பற்றி கூறும்போது, ‘திமுக ஜாதி கலவரத்தை தூண்டும் கட்சி என்று சொல்ல முடியாது. அது உண்மையோ, இல்லையோ இருப்பினும் 50 ஆண்டு காலம் பொதுவாழ்வில் இருந்த அவர் தேர்தலில் போட்டியிட வில்லை எனத் தெரிவித்துவிட்டார். அது அவரது தனிப்பட்ட முடிவு. அதனால், அவரிடம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் நான் கேட்க விரும்பவில்லை’ என்றார்.

'தமிழகத்தில் தற்போது 46 சதவீதம் பேர் மது குடிக்கிறார்கள் என்ற தகவலை அறியும்போது அவர்கள் யாருக்கு வாக்கு அளிக்கப் போகிறார்கள் என்ற பயம் எனக்கும் வந்துவிட்டது' என்றார்.

விஜயகாந்த் சில இடங்களில் கோபமுடன் நடந்து கொள்வது குறித்து கேட்டபோது, ‘பலருக்கும் பல விதமான பழக்க வழக்கம் உள்ளது. அதை தேர்தல் வந்தவுடன் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஒரே மாதிரி பேச வேண்டும் என்று உத்தரவு போட முடியாது’ என்றார்.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தளி தொகுதி ராமச்சந்திரனுக்கு சீட் வழங்கப்பட்டது பற்றி கேட்டபோது, ‘அவர் மீது வழக்குதான் போட்டிருக்கிறார்கள். அது நிரூபிக்கப்படவில்லை. அதுமட்டும் இல்லாது, மாவட்டக்குழு பரிந்துரையை மாநிலகுழு ஏற்பதைத்தவிர வழியில்லை’ என்றார் தா.பாண்டியன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x