

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாலகிருஷ்ணன் எம்எல்ஏவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று சிதம்பரம் நகர வீதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: அண்ணாமலை பல்கலைக்கழகம் சீர்கேட்டில் சிக்கிய போது அதை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று போராடி வெற்றிபெற்ற பங்கு பாலகிருஷ்ணனையே சாரும். 1967-ல் காங்கிரஸ் பலம் பொருந்திய கட்சியாக இருந்தது. அப்போது அண்ணா கூட்டிய கூட்டணிதான் அதை தோற்கடித்தது. அதேபோல் பணபலம் பொருந்திய கூட்டணியை தற்போது நாங்கள் அமைத்துள்ள கூட்டணி தோற்கடிக்கும். அவர்களை இனிமேல் ஆட்சிக் கட்டிலில் அமர விடாமல் செய்யும் மாற்றம்தான் உண்மையான மாற்றம்.
அதிமுக, திமுக கட்சிகள் வாழ்வு, சாவு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்க மாட்டார்கள். ஆனால் கனிம வளம் கொள்ளை, ஊழல், லஞ்சம் உள்ளிட்டவைகளில் ஒன்றாக செயல்படுவார்கள். வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஜெயலலிதா, கருணாநிதியின் சொத்துகள் இரட்டிப்பு ஆகியுள்ளன. அது எப்படி. ஆனால் இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பாலகிருஷ்ணனின் சொத்து மதிப்பு இரட்டிப்பு ஆகியிருக்கிறதா? அப்படி இரட்டிப்பு ஆகியிருந்தால் அவருக்கு ஓட்டு போட வேண்டாம் என்றார்.