

செங்கல்பட்டில் செயல்பட்டு வந்த அகதிகள் முகாமில் இருந்த 41 நபர்களில் 30 பேர் செய்யாறு பகுதியில் உள்ள புதிய முகாமுக்கு மாற்றப்பட்டனர். 11 பேர் விடுதலை செய்யபட்டுள்ளனர். முகாம் அமைந்திருந்த பகுதியை மாவட்ட சிறையாக மாற்ற உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறி்த்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.விஜயக்குமார் கூறும்போது,
முறையான அனுமதியின்றி கடல் மற்றும் தரைவழியாக தமிழ் நாட்டில் நுழையும் வெளிநாட்டு நபர்கள் சிறப்பு அகதிகள் முகாமில் தங்கவைக்கப்படுவார்கள். இவர்களுக்காக செங்கல்பட்டு பகுதியில் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் 17 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிறப்பு அகதிகள் முகாமில் இலங்கை, பங்களாதேஷ், நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 41 பேர் அகதிகளாக தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 11 பேரை விடுதலை செய்யுமாறு அரசு உத்தரவிட்டதின்பேரில், அவர்கள் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர். மேலும் இலங்கையைச் சேர்ந்த 20 பேர், நைஜீரியாவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த 6 பேர் என மொத்தம் 30 நபர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அகதிகள் முகாமுக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் செங்கல்பட்டில் இதுவரை செயல்பட்டு வந்த அகதிகள் முகாம், பல்வேறு பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட சிறையாக பயன்படுத்தப்பட உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸாருடன் வாக்குவாதம்
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த செந்தூரான் உட்பட 20 பேர், பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ராபானி முகமது குலாம் உட்பட 6 பேர், நைஜீரியா நாட்டை சேர்ந்த எம்.டிக்சன் உட்பட 4 பேர் என்று மொத்தம் 30 பேரை செய்யாறு சிறப்பு முகாமுக்கு இடமாற்றம் செய்ய, காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன், வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, காவல் துணை கண்காணிப்பாளர்கள் செங்கல்பட்டு வெங்கடேசன், காஞ்சிபுரம் குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து செய்யாறுக்கு 30 பேரும் வெள்ளிக்கிழமை அதிகாலை அழைத்து வரப்பட்டனர். அவர்களது உடமைகள், இரண்டு வாகனங்களில் எடுத்து வரப்பட்டது. ஒரு வாகனத்தில் இருந்து பொருட்கள் இறக்கப்பட்டன.
இரண்டாவது வாகனத்தில் இருந்த பொருட்களை இறக்க முயன்றபோது, இலங்கையைச் சேர்ந்த செந்தூரான் உள்ளிட்டவர்கள், செய்யாறு சிறப்பு முகாமில் அடிப்படை வசதி இல்லை, 30 பேர் தங்குவதற்கு போதிய அறைகள் இல்லை என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் செய்யாறு வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு ஒதுக்கீடு செய்துள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பிறகு, 2-வது வாகனத்தில் இருந்த உடமைகளை எடுத்துக்கொண்டு 30 பேரும் சிறப்பு முகாமுக்குள் சென்றனர். சிறப்பு காவல்படை ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.