Last Updated : 24 May, 2022 03:40 PM

Published : 24 May 2022 03:40 PM
Last Updated : 24 May 2022 03:40 PM

உங்கள் குரல் - தெருவிழா @ சேருகுடி | "சேருகுடி ஊராட்சி மக்களுக்கு 24 மணி நேரமும் காவிரி குடிநீர்"

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் பொதுப்பிரச்சினைகள் தொடர்பாக, அந்தந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வுகாண வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில், ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் ‘உங்கள் குரல் - தெரு விழா' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

அதன்படி, திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை ஒன்றியம் சேருகுடி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திடலில் ‘தெரு விழா' நிகழ்ச்சி ஊராட்சி மன்றத் தலைவர் த.கலாவதி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத் தலைவர் எஸ்.சகுந்தலா, ஊராட்சி செயலாளர் முத்துச்சாமி, முன்னாள் துணைத் தலைவர் எம்.பி.துரைராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் த.அசோக்குமார் வாழ்த்தி பேசினார். வார்டு உறுப்பினர்கள் இந்திராணி, சத்யா, சுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சேருகுடி, பூமாலைபுரம், நாடார் காலனி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

வார்டு உறுப்பினர் இந்திராணி பேசும்போது, ‘கிழக்கு வீதியில் கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும்' என்றார்.

நிர்மலா தேவி பேசும்போது, ‘மேலவீதி மக்களின் நலன்கருதி, அங்கு காவிரி குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும்' என்றார்.

விஜி பேசும்போது, ‘நாடார் காலனியில் பொழுதுபோக்கு பூங்கா அமைத்துத் தர வேண்டும்' என்றார்.

காமாட்சி பேசும்போது, ‘வெளியூரிலிருந்து வரக்கூடியவர்களுக்கு ஏற்படக்கூடிய குழப்பத்தைத் தவிர்க்க ஜம்புமடை பிரிவு சாலை அருகே கைக்காட்டி அமைக்க வேண்டும்' என்றார்.

கலையரசி பேசும்போது, ‘வீடுகளுக்கு அருகில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை மாற்றியமைக்க வேண்டும்' என்றார்.

மருதாயி பேசும்போது, ‘கோயிலுக்கு அருகில் மினிடேங்க் அமைத்து, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ஊராட்சி மன்றத் தலைவர் த.கலாவதி பேசியது: சேருகுடி கிராமத்திலிருந்து கல்குவாரி பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்குச் செல்லும் சாலை, சேருகுடியிலிருந்து செல்லாண்டி அம்மன் கோயில், முனியப்பன் கோயில் வழியாக நாடார் காலனிக்கு செல்லும் சாலை ஆகியவற்றை அமைக்க தேவையான நிதியைப் பெற முயற்சி எடுத்து வருகிறோம். அதேபோல, கிராம மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கவும், தேவைப்படும் பகுதிகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரி குடிநீர் கிடைக்கும் வகையில் பாப்பாபட்டி சாலையிலும், ஜம்புமடை சாலையிலும், பூலாஞ்சி சாலையிலும் தலா ஒரு மினிடேங்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேடான சில பகுதிகளுக்கு காவிரி குடிநீர் கொண்டு செல்வதில் பிரச்சினை உள்ளது. விரைவில் இதற்கு தீர்வுகண்டு, ஊராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். மேலும் இந்த ஊராட்சிக்கு வரக்கூடிய காவிரி நீரை, வாய்ப்புள்ள மேல்நிலைத் தொட்டிகளில் சேமித்துவைத்து, 24 மணிநேரமும் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

விடுபட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதால், மிக விரைவில் அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும். ஆதிதிராவிடர் காலனிக்கு சாலை வசதி செய்து தருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளையம்பட்டி பள்ளம், முனியப்பன் கோயில், நாடார் காலனி, சங்கடியான் கோயில் உள்ளிட்ட 5 இடங்களில் நெற்களம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

வேலு: வழிப்பறி கொள்ளையர்களால் அச்சம்

சேருகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் அன்றாட தேவைகளுக்காக தாத்தையங்கார்பேட்டை, முசிறி, மணமேடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். இந்த வழித்தடத்தில் தும்பலம் பகுதியிலுள்ள வனப்பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி வழிப்பறி நடக்கிறது. கொள்ளையர்களின் நடமாட்டம் காரணமாக இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வனப்பகுதியை கடக்க வேண்டியுள்ளது. இதைத்தவிர்க்க, 3 சாலைகளும் சந்திக்கக்கூடிய இடத்தில் உயர்கோபுர மின்விளக்கு வசதி செய்துதர வேண்டும். மேலும் அங்கு காவல் உதவி மையம் அமைக்கவோ அல்லது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை காவல்துறையினர் ரோந்து மேற்கொள்ளவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முருகேசன்: கல்குவாரி சாலை மிக மோசம்

சேருகுடியிலிருந்து கல்குவாரி செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. மழைக் காலங்களில் இருசக்கர வாகனங்களில்கூட செல்ல முடியவில்லை. பிரசவம், உள்ளிட்ட அவசர மருத்துவ தேவைகளுக்கு மருத்துவமனைகளுக்கு செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட அங்கு வர முடியாத நிலைமை உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளோம். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் தார்சாலை அமைத்து, தெருவிளக்கு வசதியும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.

சரவணன்: தெருவிளக்கு வசதி வேண்டும்

கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் முழுமையடையாமல் உள்ளன. சாலை அமைக்கப்படாத இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகனங்களில் சென்று வர முடியவில்லை. எனவே, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிமென்ட் சாலை பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். தேவையான இடங்களில் தெருவிளக்கு வசதியும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.

தெய்வானை: ஆதிதிராவிடர் காலனிக்கு சாலை

ஆதிதிராவிடர் காலனிக்கு செல்லக்கூடிய சாலை மிகவும் மோசமாக உள்ளது. அந்தச் சாலையை சீரமைத்துத் தர வேண்டும். மேலும், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.

கிராமங்களைத் தேடி வரும் ‘இந்து தமிழ் திசை'க்கு நன்றி

அரசு நடுநிலைப்பள்ளி உதவித் தலைமையாசிரியர் மு.சரவணக்குமார் பேசும்போது, ‘பொதுவாக, ஊடகங்கள் எந்த நிகழ்ச்சியை நடத்தினாலும் மாநகராட்சி, நகராட்சி என மக்கள்தொகை அதிகமுள்ள பகுதிகளைத் தேர்வு செய்து நடத்துவதுதான் வழக்கம்.

ஆனால், ‘இந்து தமிழ் திசை' நாளிதழ், அதற்கு மாறாக கிராமங்களைத் தேடி, அதுவும் மாவட்டத் தலைநகரில் இருந்து வெகுதொலைவில் உள்ள சேருகுடி போன்ற சிறிய ஊராட்சியை தேர்வு செய்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கடைக்கோடியிலுள்ள கிராம மக்களின் குறைகளையும் கண்டறிந்து, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கான இம்முயற்சிக்கு கிராம மக்களின் சார்பில் மிக்க நன்றி' என்றார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x