நெல்லை சம்பவம் எதிரொலி: 55 குவாரிகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைப்பு - ஆட்சியர் விஷ்ணு தகவல்

நெல்லை சம்பவம் எதிரொலி: 55 குவாரிகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைப்பு - ஆட்சியர் விஷ்ணு தகவல்
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளையும் ஆய்வு செய்வதற்காக தமிழக அரசின் உத்தரவின்பேரில் 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்தார்.

திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளத்திலுள்ள கல்குவாரியில் நடைபெற்ற மீட்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அங்கு கடந்த 8 நாட்களாக மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீட்பு குழுவினரை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். பின்னர் அவர் கூறியது: ''அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் கடந்த 14-ம் தேதி மிக பெரிய பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 6 நபர்கள் இடர்பாடுகளில் சிக்கிகொண்டனர்.

இதில் 2 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 3-வது நபரை கண்டு பிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடுத்ததாக 2 நபர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 8வது நாள் காணாமல் போன 6-வது நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

காணாமல் போன நபர்களை தொடர்ந்து 8 நாட்கள் பல்வேறு சவால்களுக்கிடையே தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளையும் ஆய்வு செய்வதற்காக தமிழக அரசின் உத்தரவின்பேரில் 6 குழுக்கள் செயல்படவுள்ளது.

இக்குழுவில் ஒரு குழுவுக்கு 6 பேர் செயல்படவுள்ளார்கள். ஒரு குழுவில் துணை ஆட்சியர் தலைமையில் 3 கனிமவளத்துறை அலுவலர்கள், 2 வருவாய்த்துறை அலுவலர்கள், 1 காவல்துறை அதிகாரிகள் செயல்படவுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை போர்க்கால அடிப்படையில் இக்குழுவினர் ஆய்வு செய்வார்கள்'' என்று தெரிவித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. சரவணன், உதவி கமாண்டர் சுதாகர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார், திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகர், துணை காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சுரேஷ் ஆனந்த், பாளையங்கோட்டை வட்டாட்சியர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in