

சென்னை: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் 741 பழமையான தமிழ் எழுத்துகளால் உருவாக்கியுள்ள தனது உருவப்படத்தைக் கண்டு வியப்படைவதாகவும், அந்த உருவப்படத்தை தனது வீட்டில் வைக்க விரும்புவதாகவும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் 741 பழமையான தமிழ் எழுத்துகளைக் கொண்டு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் உருவப்படத்தை வரைந்திருந்தார்.
மேலும், இந்தப் படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்த கணேஷ், இதுபோன்று பழமையான எழுத்துகளைக் கொண்டு ஓவியம் வரைவது இதுவே முதல்முறை என்றும், இதுதொடர்பாக ஆனந்த் மஹிந்திராவின் கருத்தை அறிய விரும்புவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்தப் பதிவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிலளித்துள்ள தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, "ஆஹா, என் உருவப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துகளால் வடிவானது கண்டு நான் வியக்கிறேன்.
தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக , உருவப் படத்தை என் வீட்டில் வைக்க விருப்பபடுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.