Published : 23 May 2022 04:24 PM
Last Updated : 23 May 2022 04:24 PM
சென்னை: “அரசால் குடியிருப்பு பகுதி என்று அங்கிகரிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பு என்று கூறி வெளியேற்றுவது சிறிதும் நியாயமற்றச் செயலாகும். மண்ணின் மக்களை காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, எளிய மக்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணும் திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து நெடுங்காலமாக அங்கு வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற தமிழக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தலைநகர் சென்னை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஏழை, எளிய மக்களை, அவர்களது சொந்த இடங்களிலிருந்து மாற்று இடம்கூட வழங்காமல் விரட்டியடிக்கப்படும் செயல்கள் தொடர்ந்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட ராஜீவ் காந்தி நகர், வில்லியர் காலனி, கலைஞர் கருணாநிதி நகர், ரயில்நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை நீர்பிடிப்பு பகுதியிலும், மேய்க்கால் நிலத்தை ஆக்கிரமித்தும் வீடுகள் கட்டியிருப்பதாக கூறி, உடனடியாக காலி செய்யக் கோரி கடந்த 21.02.2022 அன்று அறிவிப்புக் கடிதம் வழங்கி, உடனடியாக வீடுகளை அப்புறப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, என அனைத்து சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி அரசால் குடியிருப்பு பகுதி என்று அங்கிகரிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பு என்று கூறி வெளியேற்றுவது சிறிதும் நியாயமற்றச் செயலாகும். மண்ணின் மக்களை காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, எளிய மக்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணும் திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.
பன்னாட்டு பெருமுதலாளிகள், வடநாட்டு வியாபாரிகள், நிலவிற்பன்னர்கள் ஆகியோருக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தாரைவார்ப்பதோடு, ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க திராணியற்ற அரசு, அப்பாவி பூர்வகுடி மக்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து, அதிகாரத் துணைகொண்டு மிரட்டி, விரட்டி ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.
ஆகவே, தமிழக அரசு மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்தி, அவர்களது வீடுகளை இடிக்கும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், பல தலைமுறைளாக வாழ்ந்து வரும் வசிப்பிடங்களை விட்டு பூர்வகுடி மக்களை திட்டமிட்டு அப்புறப்படுத்தும் இதுபோன்ற கொடுங்கோன்மைச் செயல்கள், இனியும் தொடரக்கூடாதென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT