

சென்னை: “பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்ததைப் போல மாநில அரசுகளும் குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை தாம்பரம் மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2018-2019 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி நிறுவனங்களுக்கான சிறப்பு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு, SEZ நிறுவனங்களுக்கும், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கினார். 7 துறைகளின் கீழ் 25 வகையான ஏற்றுமதி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களுக்கு 2018-19 ஆண்டிற்கான சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியது: "மத்திய அரசின் இந்த ஏற்றுமதி நிறுவனத்திற்கு வருகை தந்ததில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். ஏற்கெனவே கூறியதுபோல, 775 மாவட்டங்களில் இருந்தும், தற்போது பொருட்கள் உற்பத்தியாகி, அதன்மூலம் ஏற்றுமதி நடைபெறுகிறது. இது இந்திய நாட்டிற்கு மிகப்பெரிய பெருமையான தருணம்.
கடந்த ஆண்டு மட்டும் 418 பில்லியன் டாலர்ஸ் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதில் சேவை தொடர்பாக மற்றொரு 250 டாலர்ஸ் உள்பட 650 பில்லியன் அமெரிக்க டாலர்ஸ் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம். இதுவொரு மிகப் பெரிய வரலாற்று சாதனை. குறிப்பாக பெருந்தொற்றுக்குப் பிறகு, உலகமே முடங்கியிருந்த நேரத்தில், நாம் இந்த சாதனையை படைத்திருக்கிறோம்.
பாரத பிரதமரின் ஊக்கமே இதற்கு காரணம். நம் நாட்டில் உள்ள பொருட்கள், நம் நாட்டில் இருப்பவர்களுக்கு பலன் தர வேண்டும். அதேபோன்று, நம் நாட்டில் உள்ள பொருட்கள் உலக அரங்கில் சென்று பலன் தரவேண்டும் என்ற மிகப்பெரிய திட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த நிறுவனத்தில் பாணியாற்றக்கூடிய 20 ஆயிரம் பேரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கரோனா இன்னும் முற்றிலுமாக போகவில்லை. நாம் செலுத்திக் கொண்ட தடுப்பூசியின் காரணமாக நாம் அனைவரும் ஓரளவு பாதுகாப்பாக இருக்கிறோம்.
எனவே, பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 150 நாடுகளுக்கு நம்முடைய தடுப்பூசியை நாம் ஏற்றுமதி செய்திருக்கிறோம். இது மிகப் பெரிய வரலாற்று சாதனை. 192 கோடிக்கு மேல் இரண்டு டோஸ் தடுப்பூசி இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இன்றைக்கு எல்லா மாநிலங்களயும் விட பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது. மத்திய அரசு வரியைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வரியை குறைத்ததால், உடனடியாக 7 ரூபாய் குறைந்தது. இந்தச் சூழலில் மத்திய அரசும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளதால், புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைந்து, மக்கள் பலனடைந்து வருகின்றனர்.
எனவே, மத்திய அரசு குறைத்ததைப் போலவே, மாநில அரசுகளும் குறைத்து மக்களுக்கான சுமையை குறைக்க வேண்டும். விலை ஏற்றத்தின்போது, பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு சாமானிய மக்களுக்கு பலன்தரும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். எனவே, மத்திய அரசு குறைத்ததைப் போல மாநில அரசுகளும் குறைத்தால், மக்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும்” என்று அவர் கூறினார்.