Published : 23 May 2022 06:26 AM
Last Updated : 23 May 2022 06:26 AM
சென்னை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8-ம், டீசலுக்கு ரூ.6-ம் கலால் வரியை குறைப்பதாக கடந்த மே 21-ம்தேதி மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 2014 முதல் 2021 வரை மத்திய அரசு கடுமையாக உயர்த்திய பெட்ரோல், டீசல் மீதானவரிகளை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், தற்போது மத்திய அரசு செவி சாய்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரிகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதன்மூலம் மத்திய அரசுக்கு வருவாய் அதிகரித்த போதிலும், மாநிலங்களுக்கான வருவாய் உயரவில்லை. அதற்கு காரணம், மத்தியஅரசு பெட்ரோல், டீசல் மீதான மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை உயர்த்திய அதேநேரத்தில், மாநில அரசுகளுடன் பங்கிடும்கலால் வரியை குறைத்ததாகும்.
கடந்த 2014 ஆகஸ்டில் மத்திய அரசின் வரிகள் பெட்ரோல் லிட்டருக்கு தலா ரூ.9.48, டீசலுக்கு ரூ.3.37 என இருந்தது. அதே வரிகள் கடந்த ஆண்டு நவம்பரில் வரி குறைப்புக்கு முன்னதாக வரி, மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவை சேர்த்து பெட்ரோலுக்கு ரூ.32.90, டீசலுக்கு ரூ.31.80 ஆக இருந்தது. அப்போது, பெட்ரோல் மீதான வரி ரூ.27.90 ஆகவும், டீசலுக்கு ரூ.31.80 ஆகவும் குறைக்கப்பட்டது. தற்போது பெட்ரோல் மீதான வரி ரூ.19.90 ஆகவும்,டீசல் மீது ரூ.15.80 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், கடந்த 2014-ம் ஆண்டைவிட தற்போது பெட்ரோலுக்கு ரூ.10.42, டீசலுக்கு ரூ.12.23 அதிகமாகவே உள்ளது. எனவே, மத்தியஅரசு மேலும் தனது வரியை குறைக்க வேண்டும். கடந்த ஆண்டுநவம்பர் 3-ம் தேதி வரியை குறைத்துமத்திய அரசு அறிவித்தபோது, தமிழக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,050 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போதைய வரி குறைப்பு மூலம் மாநிலத்தின் வருவாயில் ரூ.800 கோடி கூடுதல் இழப்பு ஏற்படும். இந்த நிதியிழப்பு கூடுதல் அழுத்தத்தை மாநில நிதியில் ஏற்படுத்தும்.
மாநில அரசுகளை கலந்து கொள்ளாமலேயே பலமுறை பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தியது. உயர்த்தப்பட்ட வரி ஓரளவு குறைக்கப்பட்ட போதிலும், 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போதும் வரிஅதிகமாகவே உள்ளது. எனவே, மாநிலங்கள் தங்களின் வரியை குறைக்க வேண்டும் என மத்தியஅரசு எதிர்பார்ப்பது நியாயமற்ற தாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT