

கோவை: கோவை வெள்ளியங்கிரி மலைப்பாதை சீரமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏழு மலைகளை ஏறி நேற்று ஆய்வு செய்தார்.
கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில். இக்கோயில் அருகேயுள்ள மலைத்தொடரில், ஏழாவது மலை உச்சியில் 6,000 அடி உயரத்தில் குகைக்கோயிலில் சுயம்பாக தோன்றிய சிவலிங்கம் உள்ளது. பக்தர்கள் மலைப் பாதையில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். தென்கைலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் இந்தக் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடர்ந்த வனப் பகுதி என்பதால், மலை ஏறுவதற்கு பிப்ரவரி மாதம் கடைசி முதல் மே மாதம் வரை மட்டுமே வனத்துறையினர் அனுமதி வழங்குகின்றனர்.
பக்தர்கள், மலையடிவாரத்தில் உள்ள பூண்டி கோயில் சென்று, அங்கிருந்து மலைப்பாதை வழியாக சுமார் 6 கி.மீ தூரத்துக்கு மேலே நடந்து செல்வர்.
இந்நிலையில், மலையடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் நேற்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சுவாமிதரிசனம் செய்தார். பின்னர், கோயிலின் தேவைகள், பக்தர்களுக்கான வசதிகள், அரசால் ஏற்படுத்தப்பட்டுவரும் அடிப்படை தேவைகள், அன்னதானக்கூடத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு, பக்தர்கள் தங்கும் கூடத்தில் ஏற்படுத்தப்பட்டுஉள்ள பிரத்யேக வசதிகள் போன்றவை குறித்தும், பக்தர்கள் மற்றும் அலுவலர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கேட்டறிந்தார்.
பின்னர், குச்சியை ஊன்றியபடி, காலை 7.30 மணிக்கு மலைப்பாதையில் ஏறத் தொடங்கிய அமைச்சர், ஏழு மலைகளை கடந்து சென்று சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்தார். செல்லும் பாதையில் பக்தர்களுக்கான தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அவருடன் இந்து சமய அறநிலையத்துறையின் பொறியியல் பிரிவு அலுவலர்கள், போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் சென்றனர்.
இதுதொடர்பாக, அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, “கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெள்ளியங்கிரி மலை உள்ளிட்ட 5 மலைக்கோயில்களுக்கு மலைப்பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. வெள்ளியங்கிரியில் அதிக அளவில் மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா முழுவதும் உள்ள சிவனடியார்கள், பக்தர்கள் பல்வேறு கால கட்டங்களில் தரிசனம் செய்ய வருகிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் கூட்டம் அதிமாகி வருவதால் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் மலைப்பாதையை சீரமைக்க வலியுறுத்தியுள்ளனர். அதற்கேற்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, பாதையை சீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்றார். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.