Last Updated : 23 May, 2022 07:47 AM

 

Published : 23 May 2022 07:47 AM
Last Updated : 23 May 2022 07:47 AM

அபரிமிதமான பஞ்சு விலை உயர்வால் 400 சிறு, நடுத்தர நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம்: ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

கோவை: அபரிமிதமான பஞ்சு விலை உயர்வால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 400-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன.

இதுகுறித்து கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தென்னிந்திய நூற்பாலைகள் சங்க (சிஸ்பா) தலைவர் ஜெ.செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஜனவரி மாதம் ஒரு கண்டி (356 கிலோ) பஞ்சு ரூ.75 ஆயிரமாக இருந்தது. தற்போது படிப்படியாக உயர்ந்து மே 21-ம் தேதி நிலவரப்படி ரூ.1.15 லட்சமாக உள்ளது. ஆனால் நூலின் விலையானது இந்த அளவுக்கு உயரவில்லை.

கடந்த ஜனவரி மாதம் ரூ.328-ஆக இருந்த நூலின் விலை மே மாதத்தில் ரூ.399-ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பஞ்சின் விலை 53 சதவீதம் உயர்ந்துள்ளது. நூலின் விலை 21 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், சிறு நூற்பாலைகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை நஷ்டம் ஏற்படுகிறது.

இந்த பஞ்சு விலை உயர்வுக்கு நடப்பாண்டு மிகவும் குறைந்த பருத்தி உற்பத்தியே காரணம். நாட்டின் பருத்தி உற்பத்தியின் விளைச்சலை துல்லியமாக அளவிடுவதற்கு அரசிடமோ, தனியாரிடமோ சரியான புள்ளி விவரங்கள் இல்லை. பருத்தி சீசன் தொடங்கியவுடன் பெரிய பஞ்சு வியாபாரிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் அதிகளவில் பஞ்சை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொண்டனர். வெளிநாடுகளுக்கும் பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சு விலை உயர்வால், எங்களது உறுப்பினர்களிடம் பஞ்சு கொள்முதல் செய்வதற்கு நடப்பு மூலதனத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு, பஞ்சை கொள்முதல் செய்ய முடியவில்லை. பல சிறு நூற்பாலைகளின் நடப்பு மூலதனம் முற்றிலும் கரைந்துள்ளது. இதையடுத்து, பஞ்சு மற்றும் நூல் விற்பனை சீராகும் வரை ஆலைகளை இயக்குவதில்லை. அதுவரை பஞ்சு கொள்முதல் செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

சிஸ்பா சங்க நிர்வாகிகள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, “எங்களது சங்கத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர நூற்பாலைகள் உள்ளன. இவை அனைத்துக்கும் நாங்கள் எடுத்துள்ள முடிவு பொருந்தும்.

இந்த நூற்பாலைகளில் நாள்தோறும் உற்பத்தியாகும் 40 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்படும். 400 நூற்பாலைகளை நம்பியுள்ள சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்திப்பார். ஏற்கெனவே பல நூற்பாலைகள் உற்பத்தியை நிறுத்தி விட்டன. கையிருப்பில் பஞ்சு வைத்துள்ள நூற்பாலைகளும் ஒருசில தினங்களில் உற்பத்தியை நிறுத்திவிடும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x