Published : 03 May 2016 04:59 PM
Last Updated : 03 May 2016 04:59 PM

வாக்காளர்களிடம் நிதி திரட்டும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.சின்னத்துரை, வாக்காளர்களிடம் தேர்தல் நிதி திரட்டி வாக்கு சேகரித்து வருகிறார்.

வேட்பாளர் வாக்கு சேகரிக்க ஊருக்குள் வருகிறார்கள் என்றால் அன்றைய தினம் கூலி வேலைக்குச் செல்வோர்கூட சிறு தொகையாவது கிடைக்குமெனக் கருதி வேலைக்குச் செல்வதைப் புறக்கணித்துவிட்டு வேட்பாளரை வரவேற்க காத்திருப்பது வழக்கம்.

இதையெல்லாம் எதிர்கொள் ளும் வகையில் தங்களை தயார் செய்துகொண்டுதான் அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுவர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.சின்னத்துரை, வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களிலெல்லாம் தேர்தல் நிதியாக கொடுக்கும் தொகையை வாங்கிச் செல்கிறார்.

கந்தர்வக்கோட்டை தொகுதிக் குட்பட்ட கறம்பக்குடி அருகேயுள்ள கிராமங்களுக்கு வேட்பாளர் எம்.சின்னத்துரை நேற்று வாக்கு சேகரிக்க சென்றபோது அவரை வரவேற்ற மக்கள், தேர்தல் செலவுக்காக அவரிடம் நிதி அளித்துள்ளனர். இவ்வாறு வேட்பாளருக்கு வாக்காளர்கள் தேர்தல் நிதி அளித்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வேட்பாளர் எம்.சின்னத்துரை கூறியபோது, “வாக்கு சேகரிக்க உள்ள பகுதி களில் களப்பணியில் ஈடுபட்டுள்ள கூட்டணிக் கட்சியினர், “வேட்பாளர் பணம் கொடுக்கமாட்டார், அவருக்கு உதவி செய்வதாக இருந்தால் அவரிடம் தேர்தல் நிதி கொடுக்கலாம்” என வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

அதன்படி, ஒரே நாளில் மணமடை, செங்கமேடு ஆகிய கிராமங்களில் தலா ரூ.5,000, முதலிப்பட்டியில் ரூ.2,200, காடம்பட்டியில் ரூ.2,000, பந்துவாக்கோட்டை, புதுவிடுதி, இருளன்விடுதியில் தலா ரூ.1,000, மற்ற கிராமங்களில் ரூ.500 முதல் ரூ.200 வரை கொடுத்தனர்.

இதுபோன்று எல்லா பகுதிகளிலும் மக்கள் எங்களை வரவேற்பதுடன், அவரவர் இயன்ற தொகையைக் கொடுத்து உதவுகின்றனர்.

என்னிடம் சேவை செய்யும் எண்ணத்தைத் தவிர, பணம் உள்ளிட்ட வேறெந்த வசதியும் இல்லை என்பதை மக்கள் உணர்ந்திருப்பதால் வாக்காளர்கள் என்னிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x