

கோவை/திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்தும், கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. மூலப்பொருட்கள் இல்லாமல் பெரும்பான்மையான விசைத்தறிகள் இயங்காததால் முதல் நாளில் ரூ.50 கோடி வரை உற்பத்தி பாதிக்கப்பட்டது.
நூல் விலை உயர்வால் ஜவுளித் துறையினர் பாதிப்படைந்துள்ளனர். இதில் காட்டன் நூல் மூலமாக விசைத்தறி உற்பத்தி சார்ந்த காடா துணி உற்பத்தி செய்யும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காடா துணி உற்பத்திக்கான நூல் விலை, கிலோ ரூ.110-ல் இருந்து தற்போது ரூ.210-ஆக உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வுக்கு ஏற்ப காடா துணிக்கான விலை ஏறவில்லை. இதனால் உரிய விலை கிடைக்காமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிப்பை சந்தித்து வந்தனர்.
இதையடுத்து நூல் விலை உயர்வைக் கண்டித்தும், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் 15 நாட்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதன்படி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களின் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. இதன்காரணமாக விசைத்தறியாளர்களுக்கு, ஜவுளி உற்பத்தியாளர்கள் நூல் மற்றும் பாவு வழங்கவில்லை. இதனால் பெரும்பாலான விசைத்தறிகள் செயல்படவில்லை.
இதுகுறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் கேட்டபோது, ‘‘கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 800-க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். நூல் விலை உயர்வால் தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே, நூல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் இதனை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்,’’ என்றனர்.
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் தரப்பில் கேட்டபோது, ‘‘இரு மாவட்டங்களிலும் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு ஒரு கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டம் காரணமாக பாவு மற்றும் நூல் வழங்கப்படாததால், பெரும்பாலான விசைத்தறிகள் செயல்படவில்லை. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ரூ.50 கோடி வரை உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட பாவு மற்றும் நூல் இருப்பு உள்ள விசைத்தறிகள் மட்டும் ஆங்காங்கு செயல்பட்டன,’’ என்றனர்.