Published : 23 May 2022 06:42 AM
Last Updated : 23 May 2022 06:42 AM
கோவை: பைக் டாக்ஸிக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்காத நிலையில், அதில் பயணித்து விபத்து ஏற்பட்டால் காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு அளிக்காது என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவையில் அரசு அனுமதி இல்லாமல் ‘பைக் டாக்ஸி’யை தனியார் நிறுவனத்தின் செயலி மூலம் இயக்கி வருகின்றனர். இதற்காக சொந்த பயன்பாட்டுக்கான இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. செல்போன் செயலி மூலம் நாம் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு, ‘பைக் டாக்ஸி’ வேண்டும் என பதிவு செய்தால், அந்த இடத்துக்கே வந்து அழைத்துச்சென்று, நாம் கூறும் இடத்தில் இறக்கிவிடுகின்றனர்.
பின்னர், அதற்கான தொகையை பெற்றுக்கொள்கின்றனர். பயணிகளை கவர கவர்ச்சிகரமான சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. ஆட்டோ, வாடகை கார்களைவிட கட்டணம் குறைவு என்பதால், பயணிகள் பலர் பைக் டாக்ஸியை நாடுகின்றனர். இந்நிலையில், கோவை மாநகரில் இயங்கிய 19 பைக் டாக்ஸிகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள், கடந்த 40 நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இருசக்கர வாகனத்தில் கட்டணம் பெற்றுக்கொண்டு ஆட்களை ஏற்றிச்செல்லும் பைக் டாக்ஸிக்கு தமிழக அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. தனியார் உணவு விநியோக நிறுவனத்துக்காக பணியாற்றுபவர்கள் தங்களுக்கு கிடைக்கும் எஞ்சிய நேரத்தில், மற்றொரு தனியார் நிறுவன செயலி மூலம் தங்களது வாகனங்களை பைக் டாக்ஸியாக இயக்குகின்றனர்.
இதுதவிர, வருமானத்துக்காக பகுதி நேரமாக இதை தொழிலாக செய்யும் மாணவர்களும் உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நீதிமன்றத்தின் மூலம்தான் விடுவிக்க முடியும். இல்லையெனில், காவல் துறையினர் அபராதத் தொகையை நிர்ணயித்து தெரிவித்தால் மட்டுமே வாகனங்களை விடுவிக்க முடியும்.
சொந்த பயன்பாட்டுக்கான இருசக்கர வாகனங்களை, பைக் டாக்ஸியாக பயன்படுத்தும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு அளிக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT