Published : 23 May 2022 06:42 AM
Last Updated : 23 May 2022 06:42 AM

சேலம் மாவட்டம் தேவூர் அருகே பாழடைந்த நூலக கட்டிடத்தால் வீணாகும் நூல்கள்: புதிய கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை

சேலம் மாவட்டம் தேவூர் அருகே பாழடைந்த நிலையில் உள்ள கிளை நூலகத்துக்கு மாற்றாக புதிய நூலகம் கட்டிக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்: சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில் பாழடைந்த கட்டிடத்தில் உள்ள புத்தகங்கள் வீணாகி வருவதால் புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில் 52 வருட பழமையான கிளை நூலகக் கட்டிடம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, பெய்து வரும் கனமழையால், கட்டிட விரிசலில் மழை நீர் புகுந்து, புத்தகங்கள் நீரில் நனைத்து சேதமடைந்து வருகிறது. நனைந்த புத்தகங்களை வெயிலில் உலர வைத்து, படிக்கும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: நூலகத்துக்கு என அரசு சார்பில் இதுவரை கட்டிடங்கள் கட்டப்படவில்லை. கடந்த 52 வருடங்களாக தனியார் பனை வெல்ல கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் , கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களாக நூலகத்தின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தும், விரிசல் ஏற்பட்டும் மழைநீர் கட்டிடங்களுக்குள் புகுந்து பல்வேறு புத்தகங்கள், நாளிதழ்கள் நனைந்து சேதம் அடைந்துள்ளன .

மேலும் நூலகம் பராமரிப்பில்லாமல் முட்புதர்கள், செடி, கொடிகள் வளர்ந்து, பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் நடமாடுகின்றன. இதனால் வாசகர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, ஆபத்தான நிலையில் இயங்கி வரும் கிளை நூலகத்தை இங்கிருந்து மாற்றி, புதிய கட்டிடத்தை கட்டி கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x