Published : 23 May 2022 06:00 AM
Last Updated : 23 May 2022 06:00 AM

தமிழகத்தில் பாமக ஆட்சியில் அனைவருக்கும் வேலை; விளை பொருளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம்: பொதுக் குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உறுதி

பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று உரையாற்றினார். உடன் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் ரயில்வே அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன்

திருவள்ளூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம், நேற்று ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயலில் நடைபெற்றது. இதில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சமூகநீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு மற்றும் திருவள்ளூர் மத்திய, தெற்கு, மேற்கு மாவட்ட செயலாளர்களான கே.என்.சேகர், து.சேகர், இ.தினேஷ்குமார் மற்றும் மாவட்ட தலைவர்களான ந.ஆனந்தகிருஷ்ணன், மா.ரமேஷ், பா.விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள், பாமக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் என 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தை முன்னேறச் செய்வதுதான் பாமகவின் இலக்கு. தமிழகத்தை வேகமாக முன்னேற்றம் அடைய செய்ய அதிகாரம் இருக்க வேண்டும். அதிகாரம் இருந்தால் சுலபமாக பல பிரச்சினைகளை தீர்க்க முடியும். தமிழகத்தில் பாமகவிடம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு இருக்கிறது; செயல்திட்டம் இருக்கிறது; தொலை நோக்கு பார்வை இருக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடிப்பழக்கம், கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். ஆகவே, வருகிற தலைமுறையை காப்பாற்ற தமிழகத்தில் பாமக ஆட்சி நடக்க வேண்டும். கடந்த 55 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரம் சீரழிந்துவிட்டது.

புதிதாக ‘திராவிட மாடல்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ‘பாட்டாளி மாடல்’ ஆட்சியில், தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் கூட இருக்காது. பெண்கள் இரவு 12 மணிக்கு சுதந்திரமாக வெளியே போகலாம். எல்லோருக்கும் வேலைவாய்ப்பு இருக்கும். விவசாயிகள் விளை பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். அன்புமணிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்துள்ளது. அதனை பாமக வாக்குகளாக மாற்ற வேண்டும்.

இந்தியாவை வழிநடத்துகிற அளவுக்கு பாமகாவிடம் செயல்திட்டங்கள் உள்ளன. பாமகவிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால் தமிழகத்தின் 75 சதவீத பிரச்சினைகளை 5 ஆண்டு காலத்தில் தீர்க்க முடியும்.

ஏரிகளை மூடி குடியிருப்புகளை கட்டுவதான் திராவிட மாடலாகும். அதற்கு பெரிய உதாரணம் முகப்பேர் ஏரித் திட்டம். நேரு ஸ்டேடியம், கோயம்பேடு பஸ் நிலையம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எல்லாம் ஏரியில்தான் கட்டப்பட்டுள்ளன. இதனால், மழை நீர் வீடுகளில் புகுகிறது.

தொலைநோக்குப் பார்வை திராவிட கட்சிகளிடம் இல்லை. இனியும் இருக்கப் போவதில்லை. சென்னையைச் சுற்றி 10 புதிய ஏரிகளை உருவாக்க முடியும். அந்த அளவுக்கு தொலை நோக்குப் பார்வை பாமகவிடம் இருக்கிறது.

திராவிட கட்சிகளிடம் பணம் இருக்கிறது. பாமகவிடம் உழைப்பு இருக்கிறது. 2026-ல் இரு திராவிடக் கட்சிகள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் வாங்கி வைத்துக்கொண்டு, பாமகவுக்குதான் வாக்களிக்கப் போகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x