Published : 04 May 2016 09:05 AM
Last Updated : 04 May 2016 09:05 AM

அப்பல்லாம் இப்படித்தான்! - குருவி நீலமும் கருவேலங்குச்சி பிரஸ்ஸும்: விளம்பர யுத்தியை நினைவுகூர்கிறார் மு.ராமநாதன்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிர மாக பங்கேற்று சிறைசென்ற திமுகவின் முன்னோடி மு.ராம நாதனுக்கு இப்போது வயது 85. எம்பியாகவும், எம்எல்ஏவாகவும் பதவி வகித்தவர். திமுகவின் உயர் மட்டக்குழு உறுப்பினர். கொங்கு மணம் கமழும் மேடைப்பேச்சு வல்லமையால் கோவை தென்றல் என்று அழைக்கப்படுபவர். அந்தக் கால தேர்தல் பிரச்சார அனுப வங்களை பகிர்ந்து கொண்டார்.

ஆரம்பத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதில்லை என்று திமுக முடிவு எடுத்தது. இருந்தாலும் எங்க ளைப்போல உள்ளூர் திமுகவில் உள்ளவங்க அங்கங்கே எங்கள் திராவிடநாடு, இந்தி எதிர்ப் புக்கு ஆதரவு தெரிவித்த சுயேச்சை களுக்கும், சிறிய கட்சிகளுக்கும் ஆதரவு அளித்து பிரச்சாரம் செய்தோம். தேர்தல் முடிந்தபிறகு அந்த வேட்பாளர்கள் சொன்னபடி நடக்கவில்லை. 1957 தேர்தலில் கட்சி வேட்பாளர்களை களம் இறக்கிய தில் 15 தொகுதிகளில் வென்றோம்.

நான் முதல்ல பஞ்சாயத்து தேர்தல்லதான் போட்டி போட்டேன். அப்புறம் தான் எம்எல்சி, எம்பி, எம்எல்ஏ தேர்தலுக்கெல்லாம் வந்தேன். அப்ப கட்சிக்காரங்க, சொந்தக் காசு செலவு செஞ்சுதான் கொடி, தோரணம் தயாரிப்பாங்க. காசு போட்டு புது துணி வாங்க வசதி யில்லாதவன் வீட்ல இருக்கிற சிகப்பு, கருப்பு துணியவே தனித் தனியா கிழிச்சு, இரண்டையும் சேர்த்து ஒட்டுப்போட்டு கம்புல கட்டிக்குவாங்க.

நான் இதுக்குன்னே சிகப்பு, கருப்புல காடா துணி பீஸ்ல வாங்கி டெய்லர்கிட்ட தைக்கக் குடுத்துடுவேன். டெய்லரும் கட்சிக் காரன்தான். இலவசமாகவே தைச்சு தந்துடுவான். அதை குச்சியில கட்டிக் கிட்டு வீடு, வீடாக ஓட்டுக் கேட்க போவோம். ஒவ்வொரு தெருவிலும் அவங்கவங்க தயாரிச்ச கொடியோட வந்து சேர்ந்துகிட்டேயிருப்பாங்க. போற வழியில கட்சி மேலே விசு வாசமா இருக்கிறவங்க நீர் மோரு, பானகம்ன்னு கொடுப்பாங்க. ஏதாவது ஒரு வீட்ல சாப்பாடு, உப்புமா கிடைக்கும். சாப்பிட்டுட்டு ஓயாத பிரச்சாரம்தான்.

பிரச்சாரத்துக்கு அண்ணா சாயங் காலம் 5 மணிக்கு வர்றாருன்னு தெரிஞ்சா பொதுமக்கள் அவரை பார்க்க மதியம் 2 மணியிலயிருந்து ஆயிரக்கணக்குல குவிஞ்சு கிடப் பாங்க. அவங்களை திரட்டறதுக் கும் பெரிசா விளம்பரம் கிடை யாது. குருவி நீலம் வாங்கி அதை தண்ணியும், கோந்தும் (மரப்பிசின்) போட்டு கலக்கிக்கு வோம். பிரம்புக்கூடை ஓலை வேய்ந்த தட்டியில் ஒரு செய்தித் தாளை ஒட்டிக்குவோம். கருவேலங் குச்சியை செதுக்கி அதன் முனையை நன்றாக பல்லால் மென்று பிரஸ் போல் ஆக்கி, அதில் நீலம் பிசின் கலந்த கலவையை ஒற்றியெடுத்து தட்டியில் எழுதுவோம்.

‘அண்ணா வருகை..., இடம்..., நாள்...!’ மட்டும் அதில் குறிக்கப் பட்டு இருக்கும். அதுக்கே ஆயிரக் கணக்கில் ஜனங்க திரண்டு வரு வாங்க. அண்ணா அப்பத்தான் 60 மைல் தொலைவில சத்தியமங் கலத்துல மீட்டிங்ல பேசிட்டிருப்பார். அதைச் சொன்னாலும் யாரும் நகர மாட்டாங்க. அண்ணாவை பார்த்து, அவர் பேச்சை முழுசாக கேட்டுட்டுத்தான் கூட்டம் கலையும். கூட்டத்துக்கு வர்ற அம்பாசிட்டர் கார்களை விரல் விட்டு எண்ணிடலாம். இன்னெய்க்கு அப்படி நடக்குமா? ஆதங்கத்துடன் கேள்வியை முன்வைத்தார் மு.ராமநாதன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x