மே 17-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்; 25-ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு

மே 17-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்; 25-ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு
Updated on
2 min read

தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17-ம் தேதியும், எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மே 25-ம் தேதியும் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 6,550 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்கள், 4 லட்சத்து 47 ஆயிரத்து 891 மாணவிகள் என 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 பேரும், தனித்தேர்வர்களாக 42 ஆயிரத்து 347 பேரும் தேர்வு எழுதினர். இவர்களில் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் தமிழ்வழி மாணவ, மாணவிகள். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 23-ம் தேதி முடிவடைந்தது.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 15-ல் தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 12,054 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்து 72 ஆயிரத்து 223 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 5 லட்சத்து 14 ஆயிரத்து 798 பேர், மாணவிகள் 5 லட்சத்து 8 ஆயிரத்து 852 பேர். தனித்தேர்வர்கள் 48,573 பேர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி ஏப்ரல் இறுதியில் முடிவடைந்தது.

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி விடைத் தாள் மதிப்பீடு முடிந்ததைத் தொடர்ந்து, மாணவர்களின் மதிப் பெண்களை பார்கோடு மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி, மதிப்பெண்களை தொகுக் கும் பணிகள் அரசு தகவல் தொகுப்பு மையத்தில் நடந்தன.

தேர்வுமுடிவு வெளியாகும் தேதி அறிவிக்கப்படாததால் மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர். மே 5, 7 அல்லது 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் என்று வெவ்வேறு நாட்களைக் குறிப்பிட்டு ஊடகங் களில் செய்திகள் வெளியானதால் மாணவர்கள் மேலும் குழப்பத் துக்கு ஆளாகினர். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர் அமைப்புகள் வேண்டு கோள் விடுத்தன.

இந்நிலையில், பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளை தமிழக அரசு நேற்று காலை 10.30 மணி அளவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணி முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும். எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் மே 25-ம் தேதி (புதன்கிழமை) காலை 9.31 மணி முதல் 10 மணிக்குள் வெளியிடப் படும்’’ என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவு மே 7-ம் தேதியும் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மே 21-ம் தேதியும் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்வு முடிவு 10 நாட்கள் தாமதமாகவும், எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு 4 நாட்கள் தாமதமாகவும் வெளி யிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

மதிப்பெண் எப்படி அறிவது?

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம்.

மேலும், ஆட்சியர் அலுவலகங் களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் (National Informatics Centre-NIC), அனைத்து மத்திய மற்றும் கிளை நூலகங்களி லும் அறிந்துகொள்ளலாம். தாங்கள் படித்த பள்ளிகளிலும் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்றும் வசுந்தராதேவி தெரிவித் துள்ளார்.

இன்றைய நாளிதழுடன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in