Published : 04 May 2016 06:19 PM
Last Updated : 04 May 2016 06:19 PM

உள்ளாட்சி, விளையாட்டுத்துறைகளில் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றம்: கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்

உள்ளாட்சி மற்றும் விளையாட்டுத்துறைகளில் 5 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் நான் அறிவித்ததை நிறைவேற்றவில்லை என கருணாநிதியும், திமுகவும் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஏற்கனவே 13 துறைகளின் மீது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கியுள்ளேன். தற்போது மேலும் 2 துறைகளின் அறிவிப்புகள் தொடர்பான விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

சுற்றுச்சூழலை பாதுகாக்க சென்னை மாநகராட்சியில் சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் ரூ.32 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.

நகராட்சிகளின் கணக்குகளை இன்றைய தேவைக்கேற்ப பராமரிக்கவும், நிதி மேலாண்மை திறன்படுத்தவும் ‘தமிழ்நாடு நகராட்சி கணக்குப்பணி’ என்ற பணியமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சித்திட்டத்தின் கீழ் சென்னையுடன் இணைக்கப்பட்ட 14 பகுதிகளில் ரூ.303 கோடியே 78 லட்சத்தில் குடிநீர் திட்டப்பணிகள், 4 பகுதிகளில் ரூ.121 கோடியில் கழிவுநீரகற்று திட்டப்பணிகள், ரூ.290 கோடியில் 225 கி.மீ சாலைகள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.

மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் மற்றும் ஈரோடு மாநகராட்சிகளில் தலா 10 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தாமிரபரணி ஆற்றை நீராதாரமாக கொண்டு ராஜபாளையம், திருத்தங்கல் பகுதிகளுக்கு குடிநீர் வழங்க ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ரூ.613 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீராதாரங்களை பாதுகாத்து, சீரமைக்க நீடித்த குடிநீர் ஆதார பாதுகாப்பு இயக்கம் தொடங்க மாதிரிப்பணிகள் நடந்து வருகின்றன.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரைக்கால் சட்டைக்குப் பதில் முழுக்கால் சட்டை வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதி, பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் எண்ணிக்கை 860 லிருந்து ஆயிரத்து 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கிராம மக்களிடையே விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல்வரின் அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் போல் ’முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டிகள்’ ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. தேசிய மாணவர் படைக்கென தனியாக பயிற்சி அகாடமி மதுரை மாவட்டம் இடையாப்பட்டியில் கட்டப்பட்டு வருகிறது. சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் பணியை அங்கீகரிக்கும் விதமாக ’முதல்வர் மாநில இளைஞர் விருது’ என்ற புதிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

உதகமண்டலத்தில் மலை மேலிடப்பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x