

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க, கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது தடுப்பு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக, கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்தார்.
கர்நாடகாவில் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்காக பல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இதை தமிழக கால் நடை பராமரிப்புத் துறை அமைச் சர் பாலகிருஷ்ண ரெட்டி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல், தமிழகத்தில் பரவாமல் தடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடி, அந்திவாடி, பேரிகை, கக்கனூர், பாகலூர், பர்கூர் அருகே குருவிநாயனப்பள்ளி ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கர்நாடகாவில் இருந்து வரக் கூடிய அனைத்து வாகனங்கள் மீதும் பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக - தமிழக நுழைவுப் பகுதியான ஓசூர் ஜூஜூவாடியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக் கப்பட்டுள்ள நோய் தடுப்பு மையத் தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு 24 மணி நேரமும் விசைத் தெளிப்பான்கள் மூலம் மருந்து தெளிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் மின் விளக்குகள் அமைத்து காவல்துறை உதவியுடன் மருந்து தெளிக்கும் பணி நடக்கிறது. இதற்காக 3 குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி தொய்வின்றி நடைபெற மருத்துவக் குழுவுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித் தார்.
ஆய்வின்போது மண்டல இணை இயக்குநர் செல்லதுரை, மாவட்ட கால்நடைப் பண்ணை துணை இயக்குநர் சிவகிருஷ்ணன், உதவி இயக்குநர் மணிமாறன் உட்பட பலர் உடனிருந்தனர்.