

அண்ணாசாலையில் முடங்கியுள்ள மெட்ரோ ரயில் பணிகளால் வாகனங்கள் நத்தைபோல் ஊர்ந்து செல்கின்றன. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சைதாப் பேட்டையில் இருந்து மே தின பூங்கா வரையிலான பணிகளை மேற்கொண்டு வந்த நிறுவனம் திட்டமிட்ட காலத்தில் பணியை முடிக்காத காரணத்தால் திடீரென வெளியேற்றப்பட்டது. பின்னர், எஞ்சியுள்ள பணிகளை அதாவது, சைதாப்பேட்டையில் இருந்து டிஎம்எஸ் வரையிலான பணிகளை மேற்கொள்ள எல் அண்டு டி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் பணிகளில் சுமார் 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், டிஎம்எஸ் - மே தின பூங்கா வரையிலான பணிகளில் 45 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக எவ்வித பணியும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
டிஎம்எஸ் - மே தின பூங்கா இடையேயான பணிகளுக்கு நிறுவனத்தை தேர்வு செய்வதில் இழுபறி நிலை நீடித்தது. இதையடுத்து, திட்ட மதிப்பீடு தொகை உயர்த்தப்பட்டு புதிதாக டெண்டர் விட்டு இறுதி செய்யப்பட்ட நிலையில், தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்ததால், பணிக்கான ஆணை வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வாகன ஓட்டிகள் கூறும்போது, ‘‘அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி பல ஆண்டுகள் ஆகியுள்ளன. ஆனால், இன்னும் ஒரு பகுதி பணியைக்கூட முடிக்காமல் இருக்கின்றனர். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இந்த பணிகள் நடப்பதால், சாலையைக்கூட பராமரிக்காமல் இருக்கின்றனர். ஆங்காங்கே இருக்கும் மேடு, பள்ளங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன’’ என்றனர்.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தேர்தல் விதிகள் நடைமுறையில் இருந்ததால் டிஎம்எஸ்- மே தின பூங்கா இடையே பணிகள் தொடங்குவதில் சிக்கல் இருந்தது. தற்போது தேர்தல் முடிந்துள்ளதால், விரைவில் மெட்ரோ ரயில் பணிகளை தொடங்குவோம்’’ என்றார்.