Last Updated : 30 May, 2016 11:35 AM

 

Published : 30 May 2016 11:35 AM
Last Updated : 30 May 2016 11:35 AM

‘தி இந்து’- வின் ‘கார் ஃப்ரீ சண்டேஸ்’ நிகழ்ச்சியில் ‘மவுன மொழியால் உண்மையை உணர்த்திய மைம் நாடகம்’- புகையிலை, போக்குவரத்துக்கும் விழிப்புணர்வு

கோவை மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, வாகனப் போக்குவரத்துக்கு மாற்றாக குறிப்பிட்ட நேரம் மட்டும் சாலையை மக்களின் பொழுதுபோக்குப் பயன்பாட்டுக்கானதாக மாற்றி வருகிறது ‘தி இந்து’வின் ‘கார் ஃப்ரீ சண்டேஸ்’ நிகழ்ச்சி.

வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை கோவை மாநகராட்சி நிர்வாகம், கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து ‘தி இந்து’ நாளிதழ் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் இடம் பெறும் பொழுதுபோக்குடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஒவ்வொரு ஞாயிறு வாரவிடுமுறையையும் புதுமையாக்கி வருகிறது.

கோவை சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரம் இடையிலான என்.எஸ்.ஆர்.சாலையில் நேற்று 11-வது வார ‘கார் ஃப்ரீ சண்டேஸ்’ நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 6.30 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சுமார் 800 மீட்டர் தொலைவு சாலை பொதுமக்களின் வசம் விடப்பட்டது.

தொடக்கமாக காலை 6.30-ல் இருந்து காலை 7.30 மணி வரை பீத்தோவன்’ஸ் பாடிஃஜீல் பிட்னஸ் ஸ்டூடியோ சார்பில் உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மேற்கத்திய இசைப் பின்னணியில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில், அதிக உற்சாகத்துடன் அனைவரும் கலந்துகொண்டனர். அதில் குறிப்பாக, ‘மிக்ஸ் மார்ஷல் ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் சூர்யக்குமார் என்பவர் வழங்கிய பயிற்சி, அனைவரையும் ஈர்த்தது. அதைத் தொடர்ந்து மைண்ட் ரீடிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

மறைத்து வைத்துள்ள சீட்டில் எழுதியிருக்கும் பெயரை பங்கேற்பாளரின் எண்ண ஓட்டத்தின் வாயிலாக அறிந்து கூறி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் மைண்ட் ரீடிங் நிபுணர் தருண் அய்யர்.

ரூட்ஸ் நிறுவன ஊழியர்கள்

இதையடுத்து ‘கார் ஃப்ரீ சண்டேஸின்’ முக்கிய நிகழ்வாக, ரூட்ஸ் நிறுவன ஊழியர்களின் ‘மைம்’ நாடகம் அரங்கேறியது. சிறு சிறு அலட்சியங்களால் ஏற்படும் வாகன விபத்துக்களையும், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும், வார்த்தைகளற்ற மெளன மொழிகளால் விவரித்து அசத்தினர். இந்த மைம் நாடகத்தை கலைக்கவிஞர் கோடீஸ்வரன் ஒருங்கிணைத்தார். பாடகர் அமுதகானம் அய்யாசாமி, சினிமா பாடல் வழியாக, பிளாஸ்டிக்கால் சூழல் மாசுபடுவதை தெரியவைத்தார். நிகழ்ச்சிகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, சாலையில் மற்ற பகுதிகளில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் தங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சிறுவர், சிறுமியர் பரமபதம், கிரிக்கெட், டென்னிஸ், சைக்கிளிங், பலூன் பறக்கவிடுதல் உள்ளிட்ட விளையாட்டுக்களிலும், பெரியவர்கள் யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றிலும் கலந்துகொண்டனர். ஓவியர் சந்திரசேகரின் கார்ட்டூன் ஓவிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. ரூட்ஸ் நிறுவனம் சார்பில் அந்நிறுவன ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளை வழிநடத்தினர்.

மக்களிடையே மரம் வளர்க்கும் எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் பயன் தரும் பல வகை மரக்கன்றுகளை ரூட்ஸ் நிறுவனத்தினர் வழங்கினர்.

மற்றொருபுறம் ஜெம் மருத்துவமனை மற்றும் ‘தி இந்து’ நாளிதழ் சார்பில் புகையிலை எதிர்ப்பு தினத்துக்காக உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு பதாகை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

சாய்பாபா காலனியைச் சேர்ந்த ‘அமாசிக் பீட்டில்ஸ்’ பேண்ட் குரூப் இசைக்குழு சார்பில் மேற்கத்திய இசை நிகழ்ச்சி நடந்தது.

சிறுவர், சிறுமியரின் அசத்தலான இசை நிகழ்ச்சி அங்கு குழுமியிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. இசை நிகழ்ச்சியை கிம்பர்லி மார்சலிநாதன் ஒருங்கிணைத்தார். கோயமுத்தூர் கல்ச்சுரல் அகாடமி சார்பில் சிறுமி ரக்‌ஷிதாவின் பரதநாட்டியம் அரங்கேறியது. ‘கார் ஃப்ரீ சண்டேஸ்’ நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மார்க் ஒன் ஈவண்ட் நிறுவனம் செய்திருந்தது.

‘வாழத் தெரியாமல் இருக்கிறான்’

சிறப்பு விருந்தினர் ரூட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் கவிதாசன் பேசும்போது, ‘நேரத்தை விட உயிர் விலைமதிப்பற்றது. அதை உணர்த்துவதற்காகவே ரூட்ஸ் நண்பர்கள் மைம் நாடகம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். துன்பத்துக்குக் காரணம் ஆசை என்பதை விட, அறியாமையும், அலட்சியமுமே முக்கியக் காரணமாகின்றன. எந்த உயிர்களும் வாழத் தெரியாமல் இருப்பதில்லை. மனிதன் மட்டுமே வாய்ப்புகள் இருந்தும் வாழத் தெரியாமல் இருக்கிறான். விரைவில் இறந்தும் போகிறான். இந்த நிலை மாறி, மக்கள் மனங்களில் புத்துணர்ச்சியூட்ட, உடல், மனம், எண்ணம், செயல்பாடு அனைத்தும் சிறப்பாக இருக்க வேண்டுமென்ற நோக்கில் ‘தி இந்து’ நாளிதழ் ‘கார் ஃப்ரீ சண்டேஸ்’ நிகழ்ச்சியை நடத்துகிறது. அப்துல்கலாம் கண்ட கனவை அனைவரும் நிறைவேற்ற வேண்டும்’ என்றார்.

‘ஆரோக்கியமே முக்கியம்’

ஜெம் மருத்துவமனைத் தலைவர் மருத்துவர் பழனிவேல் பேசும்போது, ‘துன்பத்துக்குக் காரணம் அறியாமை என்பதை விட, அலட்சியமே அதிகம் என்று கூறமுடியும். இன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பணம் கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் உடல் ஆரோக்கியம் தான் உண்மையான செல்வம். உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். இன்றைய சூழலில், உலகளவில் ஆசியக்கண்டம் தான் வாய், உணவுக்குழாய் புற்றுநோயில் முன்னிலையில் உள்ளது. 100-ல் 30 பேருக்கு புகையிலையால் புற்றுநோய் ஏற்படுகிறது. அதுவும் சிறிய வயதிலேயே இந்நோய் வருகிறது’ என்றார்.

படங்கள்: ஜெ.மனோகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x