

தமிழகத்தில் அண்ணா காலத்துக்குப் பிறகு, தற்போதைய தேர்தலில் திருப்புமுனை ஏற்படும். அந்த திருப்புமுனை கூட்டாட்சியாக இருக்கும் என, விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணியின் சார்பில் மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.பீம்ராவை ஆதரித்து நேற்று இரவு நெற்குன்றத்தில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
''தமிழகத்தில் ஊழலுக்கு உத்தரவாதம் திமுகதான். அவர்கள் செய்த 2ஜி ஊழலுக்கு தனி நீதிமன்றமே வைத்து விசாரிக்கிறார்கள். நிலக்கரி உள்ளிட்ட அத்தனையிலும் ஊழல் செய்தவர்கள் காங்கிரஸ்காரர்கள். அவர்களின் ஊழலை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
நாங்கள் 6 பேர் இணைந்திருக்கிறோம். ஆறு முகங்கள். இனி எங்களுக்கு ஏறுமுகம்தான். 50 வருடங்களாக தமிழகத்தின் சொத்துகளை திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் கொள்ளையடித்தன. ஊழலுக்கு முடிவுகட்ட மாற்று ஆட்சி அமையும்.
தமிழகத்தில் அண்ணா காலத்துக்குப் பிறகு, தற்போதைய தேர்தலில் திருப்புமுனை ஏற்படும். அந்த திருப்புமுனை கூட்டாட்சியாக இருக்கும். 93 வயதிலும் திமுக தலைவர் பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அதை நம்பாதீர்கள்'' என்று விஜயகாந்த் பேசினார்.