Published : 05 May 2016 11:08 AM
Last Updated : 05 May 2016 11:08 AM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்காளர்களுக்கு வீடு வீடாக ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி தொடங்கியது

தேர்தல் ஆணையம் சார்பில் வீடுவீடாக வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது. வரும் 10-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 11 நாட்களே உள்ளன. இந்நிலையில், தேர்தலுக்கான இறுதிக் கட்டப் பணி களில் தமிழக தேர்தல் துறையினர் விரைவாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி நிலவரப்படி 5 கோடியே 82 லட்சத்து ஆயிரத்து 620 பேர் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த சில தேர்தல்களாகவே, வாக்காளர் களுக்கு புகைப்படத்துடன் கூடிய, பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான பூத் சிலிப் வழங்கும் பணி, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி நேற்று (மே 5) தொடங்கியது.

அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர், பூத் சிலிப் வழங்குவதற்கான அட்டவணையை தயாரித்திருந்தனர். இதன்படி, பூத் சிலிப்கள் பிரிக்கப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர் களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள், நேற்று காலை முதல் வாக்காளர்களுக்கு பூத் சிலிப்களை வழங்கி, அதற்கான ஒப்புகையையும் பெற்று வருகின்றனர்.

முன்னதாக பூத் சிலிப் வழங்குவது தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்களும் கண்காணித் தனர். நேற்று காலை தொடங்கிய பூத் சிலிப் வழங்கும் பணியை வரும் 10-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழங்கப்படாத பூத் சிலிப்களை அரசியல் கட்சிகளின் முகவர்களிடம் அளிக்கக் கூடாது; அவற்றை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் 39 லட்சத்து 75 ஆயிரத்து 28 வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை, மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பி.சந்தரமோகன் தொடங்கி வைத்தார். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கினார்.

சென்னையைப் பொறுத்தவரை, பூத் சிலிப் வழங்க 3 ஆயிரத்து 770 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு 100 வீடுகள் வரை 5 நாட்களுக்குள் 500 வீடுகளுக்கு பூத் சிலிப் வழங்குவர். தொகுதி வாரியாக பூத் சிலிப் வழங்கும் பணியை கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.

தமிழகம் முழுவதும் பூத் சிலிப் வழங்கும் பணி முறையாக நடக்கிறதா என்பதை, தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிடுகின்றனர்.

அடையாள ஆவணம்

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் பூத் சிலிப்பில், வாக்காளர் புகைப்படத்துடன், பாகம் எண், வரிசை எண், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும். இதை அடையாள ஆவணமாக பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையமே பூத் சிலிப் வழங்குவதால், அரசியல் கட்சிகள் பூத் சிலிப் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பூத் சிலிப் கிடைக்காத பட்சத்தில், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆணையம் அங்கீகரித்த அடையாள ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x