Published : 23 May 2022 07:12 AM
Last Updated : 23 May 2022 07:12 AM

தோள்பட்டை பந்துகிண்ண மூட்டு உடைந்து, ஜவ்வு கிழிந்த தேசிய குத்துச்சண்டை வீரருக்கு நவீன அறுவைசிகிச்சை: சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சாதனை

சென்னை: கடலூரை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் பாலாஜி (21). இவர் 10 வயது முதல் குத்துச்சண்டை விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் குத்துச்சண்டை போட்டியின் போது அடிபட்டதில், இவரது இடதுபக்க தோள்பட்டை இறங்கியது. கையை சுழற்றி தோள்பட்டையை சரிசெய்து கொண்ட அவர் போட்டியில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், தேசிய அளவிலான 2-வது போட்டியின்போது தோள்பட்டை மீண்டும் இறங்கியது. பின்னர், சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் விளையாட்டு காயங்களுக்கான துறையின் தோள்பட்டை சீரமைப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை இயக்குநர் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் அறிவுறுத்தலின்படி மருத்துவப் பரி
சோதனை செய்ததில், அவரது தோள்பட்டை பந்துகிண்ண மூட்டு உடைந்தும், 2 ஜவ்வுகள் கிழிந்தும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, துறைத் தலைவர் ஜி.லியோனர்ட் பொன்ராஜ் தலைமையிலான குழுவினர் 3 சிறு துளைகள் மூலம் நவீன கருவிகளின் உதவியுடன் இரண்டரை மணி நேரம் அறுவைசிகிச்சை (Arthroscopic Bony Bankart Surgery) செய்து மூட்டு, ஜவ்வுகளை சரிசெய்துள்ளனர்.

இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மருத்துவமனைக்கு வந்து, பாலாஜியிடம் நலம் விசாரித்து, சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினரை பாராட்டினார். தோள்பட்டை சீரமைப்பு துறை நிபுணர் ஜி.லியோனர்ட் பொன்ராஜ் கூறியதாவது: அறுவைசிகிச்சைக்கு பிறகு நலமுடன் இருக்கிறார். இன்னும் 6 மாதத்தில் அவர் மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கலாம். மிக அரிதான இந்த அறுவை சிகிச்சை, தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த அறுவைசிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்ய ரூ.5 லட்சம் வரை செலவாகும்.

விளையாட்டு வீரர்களுக்கு அடிபட்டால், எக்ஸ்ரேவில் ஒன்றும் பிரச்சினை இல்லை என தெரிந்தாலும், மருத்
துவரை அணுக வேண்டும். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை இயக்குநர் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x