Published : 23 May 2022 06:55 AM
Last Updated : 23 May 2022 06:55 AM

ஓராண்டை நிறைவு செய்த 5 மாநில அரசுகள் | ஸ்டாலின் செயல்பாடுகளில் 85 சதவீத மக்களுக்கு திருப்தி: ஐஏஎன்எஸ் சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

சென்னை: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் 85 சதவீத மக்களுக்கு திருப்தி அளித்துள்ளதாக ஐஏஎன்எஸ் - சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. தமிழகத்தில் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக, மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பதவியேற்றார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, கேரளாவில் பினராயி விஜயன், புதுச்சேரியில் ரங்க சாமி, அசாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் முதல்வராக பொறுப்பேற்றனர்.

இந்த 5 மாநிலங்களின் முதல் வர்களாக பொறுப்பேற்றவர்களின் செயல்பாடுகள் கடந்த ஓராண்டில் எப்படி இருந்தது, மக்கள் மத்தியில் அவர்களின் செயல்பாடுகளுக்கு என்ன மதிப்பு உள்ளது என்பது குறித்து ஐஏஎன்எஸ் - சி வோட்டர்ஸ் நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அந்த கருத்துக் கணிப்பு தொடர்பாக பல்வேறு தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் செயல்பாடுகளை பொருத்தவரை 30 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் மிகவும் திருப்தி அளிப்பதாகவும், 51 சதவீதம் பேர் திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்படி, 81 சதவீதம் பேருக்கு அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இருப்பது தெரியவந்துள்ளது.

அதேநேரம் 17 சதவீதம் பேர் மாநிலத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் தங்களுக்கு திருப்தி இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். முதல்வர்களின் செயல்பாடுகளை பொருத்தவரை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிக ‘ரேட்டிங்’ பெற்றுள்ளார். கருத்துக் கணிப்பு தரவுகளின்படி, 41 சதவீதம் பேர் முதல்வராக ஸ்டாலினின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாகவும், 44 சதவீதம் பேர் சில செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 85 சதவீதம் பேர் முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளில் தங்களது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். 13 சதவீதம் பேர் அவரது செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதேபோல, தமிழக எதிர்க்
கட்சித் தலைவரின் செயல்பாடுகளை பொருத்தவரை, 35 சதவீதம் பேர் திருப்தி இல்லை என்றும், 10 சதவீதம் பேர் மிகுந்த திருப்தி என்றும், 42 சதவீதம் பேர் திருப்தி என்றும் தெரிவித்துள்ளனர். தமிழக நாடாளுமன்ற, சட்டப்
பேரவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் போதிய அளவுக்கு இல்லை என்பதே மக்கள் கருத்தாக உள்ளது.

மக்களவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பான கருத்துக்கேட்பில், 19 சதவீதம் பேர் மிகுந்த திருப்தி என்றும், 34 சதவீதம் பேர் திருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் மிகுந்த திருப்தி அளிப்பதாக 25 சதவீதம் பேரும், உள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர்களின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என 31 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 36 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளதாகவும், 12 சதவீதம் பேர் வேலையின்மை மாநிலத்தின் மிக முக்கியமான கவலையாக உள்ளதாகவும் கூறியுள்ளனர். தென் மாநிலங்களில் 45 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கைத் தரம் அடுத்த ஓராண்டில் மேம்படும் என்றும், 13 சதவீதம் பேர் எதிர்மறையாகவும் தெரிவித்துள்ளனர்.

12 சதவீதம் பேர் மேலும் ஓராண்டுக்கு இப்படியேதான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மோடி - ராகுல்
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்பாக தமிழக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 40 சதவீதம் பேர் பிரதமரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என தெரிவித்துள்ளனர். 17 சதவீதம் பேர் மிகுந்த திருப்தி என்றும், 40 சதவீதம் பேர் ஒரு சில விஷயங்களில் தங்களுக்கு திருப்தி அளிப்பதாகவும் கூறியுள்ளனர். பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியைவிட ராகுல் காந்திக்கு அதிக மதிப்பீடுகளை தமிழக மக்கள் வழங்கியுள்ளனர். பிரதமர் பதவிக்கு சரியானவர் மோடியா, ராகுலா என்ற கேள்விக்கு 54 சதவீதம் பேர் ராகுலுக்கு ஆதரவாகவும், 32 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x