Last Updated : 22 May, 2022 07:47 PM

 

Published : 22 May 2022 07:47 PM
Last Updated : 22 May 2022 07:47 PM

சுதந்திரத்திற்குப் பின் முதன்முறை | மே மாதத்தில் மேட்டூர் அணை திறப்பு; நாளை மறுநாள் முதல்வர் திறந்துவைக்கிறார்

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 116.67 அடியாக உயர்ந்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து விடுகிறார்.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துவருகிறது. இதனால் அணை நீர் மட்டம் 116.67 அடியாக உள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் (24 ஆம் தேதி) அணையில் இருந்து நீர் திறந்துவிடுகிறார்.

நாளை நீர் திறப்பு: சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1925 ஆம் ஆண்டு மேட்டூர் அணை கட்டுமானப் பணி தொடங்கி 1934 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்கான தண்ணீர், மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி திறப்பது வழக்கம்.

மழை, அணையில் நீர் இருப்பை பொருத்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு தேதியில் மாறுபாடு இருக்கும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் குறிப்பிட்ட ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். அணைகட்டி முடிக்கப்பட்ட 88 ஆண்டுகளில் இது வரை 18 முறை மட்டுமே, குறிப்பிட்ட நாளில் நீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால் வழக்கமாக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டியது, இம்மாதம் முன் கூட்டியே (மே 24ம் தேதி) மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நீர் திறந்துவிட உள்ளார்.

முதன்முறையாக மே மாதம் அணை திறப்பு: மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு இதுவரை 88 ஆண்டுகளில் 1936, 1937, 1938,1940, 19411942. 1943, 1944, 1945, 1946, 1947 ஆகிய ஆண்டுகளில் ஜுன் 12ம்தேதிக்கு முன்பாக அணை திறக்கப்பட்டுள்ளது. இதேபோல, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட 2011ம் ஆண்டில் ஜூன் 12ம் தேதிக்கு முன்பாகவே அணை திறக்கப்பட்டுள்ளது. இதில் மே மாதத்தைப் பொறுத்த வரை கடந்த 1947ம் ஆண்டில் மட்டுமே அணை திறக்கப்பட்டது. நாடு சுதந்திரமடைந்து முதல் முறையாக மேட்டூர் அணையிலிருந்து நடப்பாண்டுதான், டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

230 நாட்களுக்கு 330 டிஎம்சி நீர் டெல்டா பாசனத்துக்கு தேவை: டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை 230 நாட்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். கடந்தாண்டு ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்துக்கு ஜனவரி 28ம் தேதி வரை 129 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, இடை இடையே டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ததால், பாசனத்துக்கு நீர் தேவையைப் பொருத்து அணையில் இருந்து அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

உயரும் மேட்டூர் அணை நீர் மட்டம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று முன் தினம் 31,338 கன அடியாக இருந்தது, நேற்று காலை 25,161 கன அடியாக இருந்தது, மாலை 4 மணிக்கு 13,074 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. மேட்டூர் அணை நீர் மட்டம் நேற்று முன் தினம் 115.91 அடியாக இருந்தது, நேற்று 116.88 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும் திறப்பு குறைவாக உள்ளதால், தொடர்ந்து அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 88.58 டிஎம்சி-யாக உள்ளது.

முன் கூட்டியே நீர் திறப்பால் 5.21 லட்சம் ஏக்கர் பாசன வசதி: டெல்டா பாசனத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறந்து விடப்படுவதால், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 4,91,200 ஏக்கர், கடலூரில் 30,800 ஏக்கர் என 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x