

தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவுக்கு வருவதால் சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் நிலைக்குழு தலைவர்களின் அலுவலகங்கள் திறக்கப்பட்டு, அவற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.
தமிழக தேர்தல் குறித்த அறிவிக்கை கடந்த மார்ச் 4-ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதனால் அன்று முதல் சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், நிலைக்குழு தலைவர் அலுவலகங் கள் ஆகியவை மூடி சீல் வைக்கப்பட்டன. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளைத் தவிர, மற்ற 232 தொகுதிகளிலும் தேர்தல் நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல், சனிக்கிழமையுடன் முடி வுக்கு வருகிறது.
அதனால், 77 நாட்களுக்கு பிறகு நேற்று, ரிப்பன் மாளிகையில் மேயர், துணை மேயர் அலுவலகங் கள், கல்வி, சுகாதாரம், நிதி மற்றும் வரிவிதிப்பு, கணக்கு மற்றும் தணிக்கை, பணிகள், பொது சுகாதாரம், நகரமைப்பு ஆகியவற்றுக்கான நிலைக்குழு தலைவர்களின் அலுவலகங்கள் மற்றும் நியமனக்குழு உறுப்பினர் அலுவலகம் ஆகியவை நேற்று திறக்கப்பட்டன. தூசு படிந்து அசுத்தமாக கிடந்த அலுவலகங் களை தூய்மைப்படுத்தும் பணிக ளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலால் அகற்றப்பட்ட முதல் வர் ஜெயலலிதாவின் படங்களை மீண்டும் சுவர்களில் மாட்டுவதற் காக, அவற்றை தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்றன. வரும் திங்கள்கிழமை தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பொறுப்பேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, அன்று முதல் மாநகராட்சி மேயர், நிலைக்குழு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்க உள்ளன.