நீலகிரி மலைகளோடு சேர்த்து பழங்குடியின மக்களையும்‌ அரசு பாதுகாக்கும்‌: முதல்வர் ஸ்டாலின் உறுதி

நீலகிரி மலைகளோடு சேர்த்து பழங்குடியின மக்களையும்‌ அரசு பாதுகாக்கும்‌: முதல்வர் ஸ்டாலின் உறுதி
Updated on
2 min read

உதகை: நீலகிரி மலைகளோடு சேர்த்து பழங்குடியின மக்களையும்‌ அரசு பாதுகாக்கும் என்று அப்பகுதி மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்‌ இன்று நீலகிரி மாவட்டம்‌, உதகை அருகே உள்ள, பகல்கோடு மந்து கிராமத்தில்‌ தோடர்‌ பழங்குடியின மக்களின்‌ குடியிருப்புகளைப்‌ பார்வையிட்டு, கோரிக்கைகளை கேட்டறிந்தார்‌. அங்கு அவர்களது குடியிருப்புப்‌ பகுதிகளைப்‌ பார்வையிட்டார்‌. மேலும்‌, அக்கிராமத்தைச்‌ சேர்ந்த தோடர்‌ பழங்குடியின மக்களிடம்‌, அவர்களது வாழ்க்கை, கலாச்சார முறை குறித்து கேட்டறிந்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்‌ கொண்டார்.

அப்போது அம்மக்கள்‌ முதல்வர் ஒருவர்‌ தங்கள்‌ பகுதிக்கு வருவது இதுவே முதல்‌ முறை என்றும்‌, தோடர்‌ பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதற்கு நன்றியையும்‌ மகிழ்ச்சியையும்‌ தெரிவித்துக்‌ கொண்டனர்‌. மேலும்‌, மாவட்ட அளவில்‌ ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின்‌ கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஒரு தனி இணைய முகப்பு ஆரம்பித்து தங்களது தேவைகளை உடனடியாக நிறைவேற்றித்‌ தருவதற்கு நன்றி தெரிவித்தனர்‌.

அப்போது முதல்வர், "நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியை 33 சதவீதமாக பெருக்குவதாக அறிவித்து, வனப்பகுதிகளையும்‌, வனவிலங்குகளையும்‌ காப்பதற்கு எடுக்கப்பட்டு வரும்‌ நடவடிக்கைகளுக்கும்‌ தோடரின மக்கள்‌ நன்றி தெரிவித்துக் கொண்டனர். பழங்குடியின மக்களிடம்‌ முதல்வர்‌ பேசும் போது, ''நீலகிரியின்‌ நிலத்தை இந்த அரசு காக்கும்‌. மலைகளோடு சேர்த்து பழங்குடியின மக்களையும்‌, இந்த அரசு பாதுகாக்கும்‌. பகல்கோடு மந்து பகுதியில்‌ பால்‌ பதப்படுத்தும்‌ நிலையம்‌ அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌. இப்பகுதி மக்களுக்காக, நாடாளுமன்ற உறுப்பினர்‌ நிதியிலிருந்து ஒரு சமுதாயக்‌ கூடம்‌ கட்டித்‌ தரப்படும்‌. எந்த உதவி தேவைப்பட்டாலும்‌, என்னை தொடர்பு கொள்ளலாம்‌, உங்களுக்காக அரசு அனைத்துவித உதவிகளையும்‌ செய்யத்‌ தயாராக உள்ளது'' என்றார்.

இந்நிகழ்வின்போது, வனத்துறை அமைச்சர்‌ கா.ராமச்சந்திரன்‌, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர்‌ ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித்‌ மற்றும்‌ அரசுத்துறை அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in