Published : 22 May 2022 04:49 AM
Last Updated : 22 May 2022 04:49 AM
திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் 16-வது ஆண்டாக 2 நாள் தேசிய நெல் திருவிழா நேற்று தொடங்கியது.
தமிழர்கள் பாரம்பரியமாக சாகுபடி செய்து, பின்னர் வழக்கத்திலிருந்து மறைந்துபோன நெல் ரகங்களை மீட்டுப் பாதுகாக்கவும், விவசாயிகளிடத்தில் பரவலாக்கவும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரால் தேசிய அளவிலான நெல் திருவிழா நடத்தப்பட்டு வந்தது.
அவர்களின் மறைவுக்குப் பின்னரும், ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் இந்த நெல் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 16-வது ஆண்டாக நடைபெறும் 2 நாள் நெல் திருவிழா, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று தொடங்கியது. இதையொட்டி, விவசாயிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற முதல் அமர்வில் நெல் திருவிழா ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜிவ் வரவேற்றார். விழாவை செந்தூர்பாரி ஒருங்கிணைத்து நடத்தினார். விழாவில், மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, மாநில கொள்கை வளர்ச்சிதிட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், எம்எல்ஏக்கள் மாரிமுத்து, பூண்டி கே.கலைவாணன், பத்மஸ்ரீ விருதுபெற்ற இயற்கை வேளாண் விவசாயி சேலம் பாப்பம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரின் பெயர்களில் விருதுகளையும், பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதை நெல்லையும் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘பள்ளி அளவில் விவசாயத்தை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பள்ளிகளில் பசுமைப் படை அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
2-வது நாளான இன்று (மே 22) நெல் திருவிழா மற்றும் உணவுத் திருவிழா நடைபெற உள்ளன. இந்த நெல் திருவிழாவில் 105 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், விவசாயிகளின் பாரம்பரிய நெல் ரகங்கள், அரிசி வகைகள் மற்றும் பல்வேறு கைவினைப் பொருட்கள், வேளாண் இயந்திரங்கள் அடங்கிய கண்காட்சிகள் அமைக்கப்பட் டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT