Published : 22 May 2022 05:15 AM
Last Updated : 22 May 2022 05:15 AM

குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் 1.83 லட்சம் பேர் பங்கேற்கவில்லை - பல்வேறு மையங்களில் தாமதமாக வந்தவர்கள் திருப்பி அனுப்பிவைப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் 1.83 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களுக்கு சில நிமிடங்கள் தாமதமாக வந்த ஆயிரக்கணக்கான தேர்வர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தமிழக அரசுத் துறைகளில் சார் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 5,529 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் 4,012 மையங்களில் நேற்று நடைபெற்றது. தேர்வெழுத மொத்தம் 11 லட்சத்து 78,175 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 9 லட்சத்து 94,878 பட்டதாரிகள் மட்டுமே தேர்வு எழுதினர். பல்வேறு காரணங்களால் ஒரு லட்சத்து 83,285 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

இதற்கிடையே முறைகேடுகளைத் தவிர்க்க தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்படி காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கினால்கூட, தேர்வர்கள் 9 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வந்துவிட வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியிருந்தது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் சில நிமிடங்கள் தாமதமாக வந்த ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தங்களின் பல மாத உழைப்பு வீணாகிவிட்டதாக ஆதங்கப்பட்டனர்.

இதுதவிர குரூப் 2 தேர்வு சற்று கடினமாக இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக தேர்வர்கள் சிலர் கூறும்போது, ‘‘பொது தமிழ், ஆங்கிலம், கணிதம், மனத்திறன் பகுதிகள் எளிமையாக இருந்தன. பொது அறிவுப் பிரிவு கேள்விகள் எதிர்பாராத பகுதிகளில் இருந்து கடினமாகக் கேட்கப்பட்டதால் பதில் அளிக்க சிரமமாக இருந்தது. அதேபோல், தொழிற்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு, ஒன்றிய அரசு வார்த்தை பிரயோகம், மத்திய பட்ஜெட் உள்ளிட்ட சமீபகால நிகழ்வுசார் கேள்விகள் அதிகளவில் இடம்பெற்றிருந்தன. மேலும், பள்ளிக்கல்வியின் எமிஸ் தளம் பற்றிய கேள்விக்கான பதில்கள் சற்று குழப்பமாக இருந்தன’’ என்றனர்.

கைக்கடிகாரம் பழுது

இதற்கிடையே சென்னை பரங்கிமலை அருகேயுள்ள ஒரு மையத்தில் அறை கண்காணிப்பாளரின் கைக்கடிகாரம் பழுதானதால், 15 தேர்வர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே குரூப் 2 தேர்வை எழுதி முடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த தேர்வர்கள் கூறியதாவது:

தேர்வறைக்குள் கைக்கடிகாரம் அணிந்து செல்ல அனுமதி உண்டு. ஆனால், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வறை கண்காணிப்பாளர், நாங்கள் கடிகாரம் அணிந்து செல்ல அனுமதிக்கவில்லை. அதே நேரம் தேர்வின்போது அறை கண்காணிப்பாளரின் கைக்கடிகாரம் பழுதானதால் நேரம் குறித்து தொடர்ந்து எங்களுக்கு தவறான தகவலை வழங்கினார். இதனால் ஒரு மணி நேரம் முன்னதாக 11.30 மணிக்கே விடைத்தாள்களை எழுதி முடிக்க வேண்டியதாகி விட்டது. அதன்பின் மற்ற அறைகளில் தேர்வு நடைபெற்றதால் எங்களிடம் மன்னிப்புக் கோரி தொடர்ந்து எழுத அறிவுறுத்தினார்.

அதேநேரம் இந்த நேரக் குளறுபடியால் ஓஎம்ஆர் விடைத்தாளில் அவசர அவசரமாக ஏற்கெனவே பதில்களை எழுதி முடித்துவிட்டோம். மேலும், மாற்று ஓஎம்ஆர்விடைத்தாள்களும் வழங்கப்படவில்லை. இதனால் அந்த அறையில் தேர்வெழுதிய 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி ஆணையத்துக்கு நேரில் புகார் கடிதம் கொடுத்துள்ளோம். அதிகாரிகள் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, கைக்கடிகாரம் பழுதானதால் தவறிழைத்துவிட்டதாகக் கூறி சம்பந்தப்பட்ட தேர்வறை கண்காணிப்பாளரும் மன்னிப்புக் கடிதம் அளித்துள்ளார்.

தற்போது நடைபெற்றுள்ள முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது. அடுத்தகட்ட முதன்மைத் தேர்வு செப்டம்பரில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x