Published : 22 May 2022 06:26 AM
Last Updated : 22 May 2022 06:26 AM

‘ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டம் தொடக்கம் - நீலகிரி அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின்கீழ், குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

உதகை: 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ‘ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின்கீழ், குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய பிரத்யேக மையம் அமைக்கப்படும் என்று ‘உதகை - 200’ விழாவில் முதல்வர் அறிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 7-ம் தேதி பேரவையில் விதி எண்.110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், ‘6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது’ என்று அறிவித்தார்.

அதை செயல்படுத்தும் விதமாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து, 6 வயத்துக்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரைப் பிரித்தறிந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்காக, ‘ஊட்டச்சத்தை உறுதிசெய்’ என்ற புதிய திட்டத்தின்கீழ் முத்தோரை குழந்தைகள் மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.

இந்தச் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஒருமாத காலத்துக்கு நடைபெறும். இதன்மூலம் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடையவர்களாக கண்டறியப்பட்டுள்ள குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், சிறப்பு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படும் குழந்தைகளின் விவரங்கள் அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஊட்டச்சத்து மட்டும் தேவைப்படும் குழந்தைகளுக்கு தனியாக சிறப்புஊட்டச்சத்து திட்டம் உருவாக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் திட்ட இயக்குநர் வி.அமுதவல்லி, ஆட்சித் தலைவர் சா.ப.அம்ரித், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

‘உதகை - 200'

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகை நகரம் உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆனதையொட்டி, உதகை அரசினர் கலைக் கல்லூரி மைதானத்தில் ‘உதகை – 200’ விழாவினை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதில், உதகையின் சிறப்புகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.

மேலும், உதகை நகரை 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைத்த ஜான் சலீவனை சிறப்பிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மற்றும் தருமலிங்கம் வேணுகோபால் ஆகியோரால் தொகுக்கப்பட்ட ‘ஊட்டி 200 - உதகையின் 200 வருடங்கள்’ என்ற விழா மலரை முதல்வர் வெளியிட்டார்.

விழாவில், ஆட்சியர் சா.ப.அம்ரித் வரவேற்றார். 9500 பயனாளிகளுக்கு ரூ.28 கோடி மதிப்பிலான உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், 20 புதிய பணிகளுக்கு ரூ.34.30 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டினார். ரூ.56.36 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நீலகிரி வனப்பரப்பை 20 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய பிரத்யேக மையம் அமைக்கப்படும்.

நீலகிரியை பாதுகாத்தால் தமிழகத்தை பாதுகாப்பதுபோல் இருக்கும். இந்த அரசு மலைகள், மக்களை காப்பாற்றும், அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும். இயற்கையைக் காக்கும் அரசு இது, திராவிட மாடல் அரசு. இவ்வாறு முதல்வர் பேசினார்.

செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், எம்பி ஆ.ராசா, எம்எல்ஏ ஆர்.கணேஷ் ஆகியோர் விழாவில் கலந்துக் கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x