Published : 22 May 2022 04:15 AM
Last Updated : 22 May 2022 04:15 AM

பொள்ளாச்சியில் நூலகம் கட்ட ரூ.6 லட்சம் நிதி வழங்கிய மக்கள்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ஜோதி நகரில் புதிய நூலகம் கட்டவேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் பொள்ளாச்சி ஜோதி நகரில் 64 சென்ட் இடத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் கட்ட திட்டமிடப்பட்டது.

இதற்கான பணிகளை மேற்கொள்ள ஜோதிநகர் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், விவேகானந்தர் நற்பணி மன்றம், குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து ரூ. 6 லட்சம் நிதி திரட்டினர். இதற்கான காசோலையை, நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணனிடம் பொதுமக்கள் வழங்கினர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நகராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகள், பூங்காக்கள், நூலகங்கள் அமைக்க பொதுமக்கள், தன்னார்வலர்கள் முன்வந்து ஒரு பங்கு தொகையை வழங்கினால் 2 பங்கு தொகையை ஒதுக்கி அதற்கான பணிகளை மேற்கொள்ளலாம்.

மேலும் 50 சதவீத பொதுமக்கள் பங்களிப்பு வழங்கும் பட்சத்தில் அந்த கட்டுமானப் பணிகளை பொதுமக்களே மேற்கொள்ளும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். ஜோதிநகரில் நூலகம் கட்ட பொதுமக்கள் நிதி வழங்கியுள்ளனர். உடனடியாக அங்கு நூலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த தன்னார்வலர்கள் பொதுமக்கள் முன்வந்தால், பொள்ளாச்சி நகராட்சியை தமிழகத்தின் முன்மாதிரி நகராட்சியாக மாற்ற முடியும்,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x