

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் என்ற ஸ்ரீகரன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகனின் மனைவி நளினி தற்போது பரோலில் விடுவிக்கப்பட்டு காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். முருகன் பரோல் கோரி உண்ணாவிரதம் இருந்த நிலையில் வழக்கறிஞர் புகழேந்தி நேற்று அவரை சந்தித்துப் பேசினார்.
பின்னர், காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் உள்ள நளினியின் வீட்டுக்குச் சென்ற வழக்கறிஞர் புகழேந்தி அவரை சந்திக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், சிறைத்துறை அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே நளினியை சந்திக்க முடியும் என்று கூறி விட்டனர். இதையடுத்து, சிறைத் துறை அனுமதி கடிதத்துடன் நளினியை வழக்கறிஞர் புகழேந்தி நேற்று மாலை சந்தித்தார்.
பின்னர், வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையில் நளினியும், முருகனும் இருந்தார்கள். ஆனால், பேரறிவாளன் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் மற்ற 6 பேரின் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது நளினிக்கும், முருகனுக்கும் பெரும் நம்பிக்கையை தந்திருக்கிறது.
நளினியை சந்திப்பதற்கு முன்னதாக முருகனை மத்திய சிறையில் சந்தித்தேன். 6 நாள் பரோல் விடுப்பு கேட்டு முருகன் கடந்த 19 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். சிறைத்துறை அதிகாரிகள் 6 நாள் பரோல் விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து அவர் உண்ணா விரதத்தை கைவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பரோல் வழங் கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை கோரிக்கை விடுத்தும் ஒருமுறை கூட பரோல் வழங்கப்படவில்லை. தற்போது, உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற 6 பேரையும் விடுதலை செய்து குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காத வகையில் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம்புகிறோம்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.