Published : 21 May 2022 06:00 PM
Last Updated : 21 May 2022 06:00 PM

“பெரும்பாக்கத்தில் புதிய தொழில்நுட்பத்தில் குடியிருப்புகள்: மே 26-ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்” - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: “பெரும்பாக்கத்தில் புதிய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி இம்மாதம் 26-ம் தேதி திறந்து வைக்கிறார்” என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் உலகளாவிய வீட்டு வசதி தொழில்நுட்பமான முன் மாதிரி வடிவமைக்கப்பட்ட கட்டிட முறையில் பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,"தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பெரும்பாக்கம் திட்டப்பகுதியில், உலகளாவிய வீட்டு வசதி தொழில்நுட்பமான முன் மாதிரி வடிவமைக்கப்பட்ட கட்டிட முறையில் அனைத்து வசதிகளுடன் கூடிய 1152 குடியிருப்புகள் ரூ.116.37 கோடி செலவில் தலா 96 குடியிருப்புகள் கொண்ட 12 கட்டிட தொகுப்புகளில் தரைத்தளம் மற்றும் ஐந்து தளங்களாக கட்டப்பட்டுள்ளது .

இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு குடியிருப்பிற்கும் ஒன்றிய அரசின் மானியம் ரூ.5.50 லட்சமும், மாநில அரசின் மானியம் ரூ.3.50 லட்சமும், பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.1.50 லட்சமும் ஆக மொத்தம் குடியிருப்பு ஒன்றிக்கு ரூ.10.50 லட்சங்கள் செலவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பும் தலா 406 சதுர அடி பரப்பளவில், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை ஆகியவற்றை கொண்டுள்ளது. ஒவ்வொரு கட்டிட தொகுப்புகளிலும் இரண்டு மின்தூக்கி வசதி, மாற்று திறனாளிகளுக்கான சாய்தளம், சூரிய மின் உற்பத்தி, மேல்நிலை தண்ணீர் தொட்டி ஆகியன அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டப்பகுதியில் ஒவ்வொரு கட்டிடத் தொகுப்புகளுக்கும் பாதாள சாக்கடை வசதி செய்யப்பட்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

திட்டப் பகுதியில் மூன்று கீழ்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு அனைத்து குடியிருப்புகளுக்கு தேவையான தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்டிட தொகுப்புகளிலும் புதைவட மின் கம்பிகள் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டிட தொகுப்புகளிலும் தேவையான இருசக்கர வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திட்டப் பகுதியில் நூலகம், நியாயவிலை கடை, அங்கன்வாடி, ஆவின் பாலகம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டி, பாதாள சாக்கடை வசதி, இருசக்கர வாகன நிறுத்தம், பூங்காக்கள், மின்துக்கி வசதி ,பொதுப்பயன்பாட்டிற்கான சூரிய ஒளி மின்சாரம், தார் சாலை, சுற்றுசுவர் மற்றும் தெரு விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் தலைமையில் சென்னையில் 26-ம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி இத்திட்டப் பகுதியினை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளை வழங்க உள்ளார். இதுபோன்று முன் மாதிரி வீட்டு வசதி திட்டம் குஜராத் , ஜார்க்கண்ட் , மத்தியப் பிரதேசம் , உத்தரப் பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு, இத்திட்டம் முதன் முதலாக தமிழ்நாட்டில் உரிய காலத்திற்குள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x