Published : 21 May 2022 04:18 PM
Last Updated : 21 May 2022 04:18 PM

மேட்டூர் அணை திறப்புக்கு முன்பு அரசு உடனடியாக செய்ய வேண்டியவை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பட்டியல்

சென்னை: "மே 24-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பு போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணியை முழுமையாக முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: "காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து மே 24-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் அபரிமிதமான மழையினால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் அணை முழுக் கொள்ளளவை எட்டக்கூடிய நிலையில் வேறு வழியில்லை. அதே நேரத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி இன்னும் நிறைவடையவில்லை. பல ஆறுகளில் பல்வேறு இடங்களில் பாலம் கட்டுகிற வேலை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பாசனப் பகுதி முழுவதும் தண்ணீர் சென்று சேருவதில் இடையூறு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

கடந்த காலத்தில், மழை மற்றும் மேட்டூர் அணை திறப்பு போன்ற காரணங்களைக் கூறி தூர்வாரும் பணியை முழுமையாக முடிக்காமலேயே முழு பணத்தையும் ஒப்பந்ததாரர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். எனவே, தூர்வாரும் பணியை தீர்மானிக்கப்பட்ட அளவுகளில் முழுமையாக முடித்த பின்னரே பணத்தை கொடுக்க வேண்டும். 24-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் கல்லணை திறக்க மேலும் ஒரு வாரகாலம் ஆகும்.

எனவே, இந்த அவகாசத்தை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணியை முழுமையாக முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

தண்ணீர் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் விவசாய பணிகளை துவக்குவதற்கு விவசாயிகள் தயார் நிலையில் இல்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டு குறுவை சாகுபடிக்கு தேவையான அளவு விதை, உரம் போன்ற இடுபொருட்கள் கிடைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும், கூட்டுறவு வங்கிகள் மூலம் புதிய பயிர்க்கடன் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x