Published : 21 May 2022 02:38 PM
Last Updated : 21 May 2022 02:38 PM

சென்னை மெட்ரோ குடிநீர் தற்காலிகப் பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்

சென்னை: சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தின் தற்காலிக தூய்மைப் பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் கடத்திவரும் திமுக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களுக்கு உயிர் காக்கும் நல்ல குடிநீர் வழங்குவதற்கான பணிகளை செய்யும் தொழிலாளர்கள், அடிப்படை உரிமைகள் கேட்டு வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியிருப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது.

குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தை (CMWSSB) சேர்ந்த தூய்மை தொழிலாளர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியும் இதுவரை பணி நிரந்தரம் செய்யாமலும், உரிய ஊதியம் வழங்காமலும் தமிழ்நாடு அரசு அவர்களின் உழைப்பை உறிஞ்சி, வஞ்சித்து வருவது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

அதுமட்டுமின்றி, தற்போது அப்பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பைத் தனியாருக்குத் தாரைவார்த்ததன் மூலம், தூய்மைத் தொழிலாளர்களின் இத்தனை ஆண்டுகால அர்ப்பணிப்பு மிக்க உழைப்பினை விழலுக்கு இறைத்த நீராக எவ்வித பதில் பயனுமின்றி வீணடித்துள்ளது தமிழ்நாடு அரசு.

தங்களின் நியாயமான உரிமைகளை வழங்க வேண்டி, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், போராடும் ஊழியர்களைக் காவல்துறை மற்றும் குடிநீர் வாரிய நிர்வாகத்தின் மூலம் மிரட்டி அச்சுறுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இது முழுக்க முழுக்கத் தூய்மை தொழிலாளர்களுக்குத் திமுக அரசு செய்யும் பச்சைத் துரோகமாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாகச் சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் தற்காலிக பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதோடு, அவர்களுக்கு உரிய ஊதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x