Published : 21 May 2022 12:21 PM
Last Updated : 21 May 2022 12:21 PM

ஊட்டச்சத்தை உறுதி செய் | சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

உதகை: 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் கீழ், குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 21) தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆரோக்கியமான குழந்தைகளே, நாட்டின் வளமான எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 7.05.2022 அன்று சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன், பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம்.

மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது என்றும் அறிவித்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து, 6 வயத்திற்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரைப் பிரித்தறிந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

'ஊட்டச்சத்தை உறுதி செய்' என்ற புதிய திட்டத்தின் கீழ் முத்தோரை குழந்தைகள் மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமினை தொடங்கி வைத்தார். இந்தச் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஒருமாத காலத்திற்கு நடைபெறும். இதன்மூலம் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடையவர்களாக கண்டறியப்பட்டுள்ள குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், சிறப்பு மருத்துவப் பரிசோதனைகளுக்குட்படும் குழந்தைகளின் விவரங்கள் அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஊட்டச்சத்து மட்டும் தேவைப்படும் குழந்தைகளுக்கு தனியாக சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் உருவாக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் திட்ட இயக்குநர் வி.அமுதவல்லி, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சா.ப.அம்ரித், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x